பள்ளிப் பாடப்புத்தகங்களில், இந்திய வரலாறு எவ்வாறு சித்தரிக்கப்படுகிறது என்று நடிகர் மாதவன் கவலைகளையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.  இந்திய நாட்டின் தென் பகுதியை ஆட்சி செய்த  பாண்டியர்கள்,சோழர்கள், சேரர்கள், பல்லவர்கள் உள்ளிட்டவர்களை குறைத்து மதிப்பிடுவதாகவும் மாதவன் குற்றச்சாட்டு வைத்துள்ளார். 

ஜாலியன் வாலாபாக் படுகொலை:

நடிகர் மாதவன் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் உரையாடலில் அவர் தெரிவித்ததாவது, இந்திய வரலாற்றின் சில பகுதிகள் மட்டும், மற்றவற்றைவிட  ஏன் அதிக கவனம் செலுத்தப்படுகின்றன என்று மாதவன் கேள்வி எழுப்பினார். இதைச் சொல்வதால் நான் சிக்கலில் மாட்டிக் கொள்ளலாம், ஆனால் நான் அதைச் சொல்வேன். 

ஜலியன் வாலாபாக் படுகொலை குறித்து  கருத்துகளை தெரிவிக்கையில், படுகொலையைப் பற்றிய பிரிட்டிஷ் அரசின்  விளக்கங்களை "தவறான கதை" எனக் குற்றம்சாட்டினார். அந்த நிகழ்வில் உயிரிழந்த இந்தியர்களையே குற்றவாளிகளாக காட்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக அவர் விமர்சித்தார். 

தென் அரசர்களுக்கு குறைவான மதிப்பு:

இந்திய நாட்டின் கடந்த காலத்தின் முக்கிய பகுதிகள், குறிப்பாக தெற்கு பகுதியை ஆட்சி செய்த அரசாங்கங்களின் சாதனைகள் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை என்றும் பாண்டியர்கள்,சோழர்கள், சேரர்கள் உள்ளிட்டவர்களை குறைத்து மதிப்பிடுவதாக உணர்வதாகவும் மாதவன் தெரிவித்துள்ளார். 

நான் பள்ளியில் வரலாற்றைப் படித்தபோது, முகலாயர்கள் பற்றி எட்டு அத்தியாயங்களும், ஹரப்பா மற்றும் மொஹஞ்சதாரோ நாகரிகங்கள் பற்றி இரண்டு அத்தியாயங்களும், பிரிட்டிஷ் ஆட்சி மற்றும் சுதந்திரப் போராட்டம் பற்றி நான்கு அத்தியாயங்களும் இருந்தன.

ஆனால் தெற்கு பகுதிகளின் அரசர்களான - சோழர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள் மற்றும் சேரர்கள் பற்றி ஒரு அத்தியாயம் மட்டுமே இருந்தன. சமீபத்தில் NCERT 7 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் முகலாயர்கள் குறித்த பாடப்பகுதிகள் நீக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில், மாதவனின் கருத்து, கவனம் பெற்றுள்ளது.

2,400 ஆண்டுகள் ஆட்சி:

வரலாற்றில் சோழப் பேரரசு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய போதிலும், பள்ளிப் பாடப்புத்தகங்களில் சோழப் பேரரசு பற்றிய கவனம் இல்லாதது குறித்து மாதவன் கவலைகளை வெளிப்படுத்தினார். முகலாயர்களும் ஆங்கிலேயர்களும் சுமார் 800 ஆண்டுகள் ஆட்சி செய்தாலும், சோழப் பேரரசானது 2,400 ஆண்டுகள் நீடித்தது என்றும், கடல் பயணத்திற்கு முன்னோடியாக இருந்தது என்றும், ரோமை அடைந்த வர்த்தக வழிகள் இருந்ததாகவும் அவர் எடுத்துரைத்தார். அவர்களின் கலாச்சார மற்றும் மத செல்வாக்கானது, கொரியா பகுதிகள் வரை பரவியிருந்தது. ஆனால் இந்த வளமான வரலாறானது, பாடப்புத்தகத்தில் ஒரு அத்தியாயத்தில் சுருக்கப்பட்டுள்ளது. 

வரலாற்றை எப்படி சாயம் பூச முடியும்

இது யாருடைய கதை?, பாடத்திட்டத்தை யார் தீர்மானித்தார்கள்?, தமிழ் உலகின் பழமையான மொழி, ஆனால் அதைப் பற்றி  தெரிவதில்லை. நமது கலாச்சாரத்தில் மறைந்திருக்கும் அறிவியல் அறிவு இப்போது கேலி செய்யப்படுகிறது.

இந்திய வரலாற்றின் பிரிட்டிஷ் பதிப்பு பெரும்பாலும் சுதந்திரப் போராட்ட வீரர்களை எதிர்மறையாக சித்தரிக்கிறது. குறிப்பாக ஜாலியன் வாலாபாக் படுகொலை போன்ற நிகழ்வுகளில், இந்திய மக்களை பயங்கரவாதிகள் மற்றும் கொள்ளையர்கள் என்றும் சுடப்படவேண்டியவர்கள் எனவும், அவருக்கு தோட்டாக்கள் தீர்ந்து போனதால் அவர் சுடுவதை நிறுத்தினார் என்றும் ஜெனரல் டயரின் பேத்தி உள்ளிட்ட பிரிட்டிஸ் தரப்பினர் கூறுகின்றனர். ஒரு தவறான கதையை உருவாக்கும் அளவுக்கு வரலாற்றை எப்படி சாயம் பூச முடியும் என்று நடிகர் மாதவன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.