புண்யகோடி தத்து யோஜனா திட்டத்தின் கீழ் கர்நாடகாவின் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா ஒரு பசு வீதம் 31 பசுக்களை தத்தெடுப்பதாக நடிகர் கிச்சா சுதீப் தெரிவித்துள்ளார்.பொதுமக்களின் ஒத்துழைப்புடன் பசுக் கொட்டகைகளை பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.


சுதீப் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் பிரபு பி சவுகான் இல்லத்தில் 'கௌ பூஜை' செய்தார், இதற்கிடையே பசுக்களைப் பாதுகாப்பதில் மாநில அரசு முன்மாதிரியான பணிகளைச் செய்து வருவதாகப் பாராட்டினார்.


"புண்யகோடி தத்து யோஜனாவின் தூதராக என்னை நியமித்ததன் மூலம் அரசு எனது பொறுப்பை அதிகரித்துள்ளது. என்னை நியமித்த முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் அமைச்சர் பிரபு சவாண் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்று சுதீப் கூறினார்.


பொது மக்கள் மற்றும் திரையுலக கலைஞர்கள், அமைப்புகள் பசுக்களை தத்தெடுக்க வேண்டும் என சுதீப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இந்த ஆண்டு தொடக்கத்தில், முதல்வர் பசவராஜ் பொம்மை, தனது பிறந்தநாளில் 11 பசுக்களை தத்தெடுத்து, தனது கனவுத்திட்டமான மாடு தத்தெடுக்கும் திட்டமான 'புண்யகோடி யோஜனா திட்டத்தைச் செயல்படுத்தினார். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா 31 பசுக்களை தத்தெடுத்துள்ளதாக அமைச்சர் பிரபு சவான் அறிவித்தபோது, ​​அவரைப் போலவே தானும் பசுக்களை தத்தெடுப்பதாக அமைச்சரிடம் சுதீப் தெரிவித்தார்.


கர்நாடக மாநிலத்தில் பசு வதைத் தடைச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு 100 கோசாலைகள் நிறுவப்பட்டு வருகின்றன. புண்யகோடி தத்தெடுப்புத் திட்டத்தைச் செயல்படுத்திய நாட்டிலேயே முதல் மாநிலமாகிறது கர்நாடகா. விலங்குகள் நல வாரியம், கால்நடை உதவி மையம், பசு சஞ்சீவினி ஆம்புலன்ஸ், கோமாதா கூட்டுறவு சங்கம், ஆத்ம நிர்பர் கோசாலை அமைத்தல் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்றார் அமைச்சர்.


பராமரிப்புச் செலவைப் பொறுத்த வரையில், கால்நடை வளர்ப்புத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 11,000 ரூபாய் வழங்கப்படும். புண்ணியகோடி தத்து போர்ட்டலில் உள்ள எந்த ஒரு கோசாலைக்கும் பொதுமக்கள் தங்கள் விருப்பப்படி உள்கட்டமைப்பு மற்றும் இதர செலவுகளுக்காக குறைந்தபட்சம் ₹10 நன்கொடையாக அளிக்கலாம்.




இத்திட்டத்தின் நோக்கம் கோசாலைகளை நிதி ரீதியாகவும், பொது மக்களின் ஒத்துழைப்போடும் சீராக இயங்கச் செய்வதே ஆகும். மாடுகளை தத்தெடுத்தல், கோசாலைக்கு நன்கொடை வழங்குதல் மற்றும் கால்நடை தீவனத் திட்டத்தின் கீழ் கால்நடை வளர்ப்பில் பொதுமக்களின் பங்களிப்பு ஆகியவை வழங்கப்படுகிறது.


அரசுடன் கைகோர்த்து பசு பாதுகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு நடிகர் சுதீப்பிடம் பிரபு சவான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


அதே நிகழ்ச்சியில், நடிகர் சுதீப் புண்யகோடி தத்து யோஜனாவின் தூதராக நியமிக்கப்பட்டதற்கான கடிதம் மற்றும் நினைவுப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டார்.


இந்நிகழ்ச்சியில் துறை செயலாளர் டாக்டர் சல்மா கே.பஹீம், கமிஷனர் எஸ்.அஸ்வதி, துணை இயக்குனர் டாக்டர் ஸ்ரீநிவாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.