ஜார்கண்ட் மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற ஸ்பெயின் பெண்ணை ஏழு பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தன்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியதாக நடிகர் துல்கர் சல்மான் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், ”இந்த செய்தியைக் கேட்டு நான் மிகவும் வேதனையடைந்தேன். சமீபத்தில் இருவரும் கோட்டயத்தில் உள்ள எனது உறவினர்கள் வீட்டில் விருந்துக்கு வந்திருந்தனர். யாருக்கும் இதுபோன்ற நிலை எங்கும் வரக்கூடாது” என பதிவிட்டிருந்தார்.






இந்த சம்பவத்திற்கு பிறகு தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து அந்த பாதிக்கப்பட்ட பெண் இன்ஸ்டாகிராம் நேரலையில் வந்து தெரிவித்தனர். அந்த வீடியோவில், “ யாருக்கும் நடக்கக்கூடாது என்று நாங்கள் நினைக்காத ஒன்று எங்களுக்கு நடந்துள்ளது. நான் ஏழு பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டேன். நாங்கள் தாக்கப்பட்டு, எங்களிடம் இருந்து சில பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. எங்களிடம் இருந்தும் அனைத்தையும் அவர்கள் திருடவில்லை, அந்த நேரத்தில் அவர்கள் என்னை பாலியல் வன்கொடுமை செய்யவே விரும்பினர். நாங்கள் இப்போது காவல்துறை உதவியிடன் மருத்துவமனையில் இருக்கிறோம்” என தெரிவித்தார். 


என்னதான் நடந்தது..? 


ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இருந்து 400 கிமீ தொலைவில் உள்ள தும்கா மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு பிரேசில் தம்பதியினர் தாக்கப்பட்டனர். இவர்கள் ஒரு சில மாதங்களுக்கு முன்பு பைக்கில் உலக சுற்றுலா செல்லும் வகையில் திட்டமிட்டு அந்த ஒரு பகுதியாக இந்தியா வந்தடைந்தனர். இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு பயணத்தின் ஒரு பகுதியாக ஜார்கண்ட் சென்ற அந்த தம்பதினர், தும்காவில் இரவை கழிக்க கூடாரம் அமைத்திருந்தனர். அப்போதுதான் அந்த் தம்பதியினர் தாக்கப்பட்டனர். 


நேபாளத்திற்கு செல்வதற்கு முன்பு இந்த தம்பதியினர் கேரளாவிற்கும் சென்றுள்ளனர். அந்த நேரத்தில்தான் கோட்டயத்தில் துல்கர் சல்மானின் உறவினர்கள் ஏற்பாடு செய்திருந்த பார்ட்டியில் கலந்து கொண்டதாக துல்கர் சல்மான் தெரிவித்தார். 


இந்த நிலையில், சம்பவத்தில் தொடர்புடையவர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மூன்று குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தும்கா எஸ்.பி. பீதாம்பர் சிங் கெர்வால் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 


 


தொடர்ந்து, தும்கா மாவட்ட சிவில் சர்ஜன் பி.பி.சிங் தெரிவிக்கையில், “தம்பதியினர் பாகல்பூரில் இருந்து நேபாளத்திற்கு பயணம் செய்யும்போது ஒரு இரவு தங்குவதற்காக குருமஹாட் என்ற இடத்தில் தற்காலிக கூடாரத்தை தயார் செய்தனர். இங்குதான் நாட்டையே உலுக்கிய சம்பவம் நடந்தது. அந்த பெண்ணுக்கு வெளிப்படையான காயங்கள் எதுவும் இல்லை” என தெரிவித்தார். 


இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் தெரிவிக்கையில், “ நான் மிகவும் காயமடைந்துள்ளேன், எனது வாய் உடைந்துவிட்டது. ஆனால், என் மனைவி தற்போது என்னைவிட மிக மோசமான நிலையில் உள்ளார். அவரை பலமுறை ஹெல்மெட்டால் அடித்திருக்கிறார்கள், தலையிலும் கல்லால் அடித்தார்கள். நல்லவேளையாக அவள் ஒரு ஜாக்கெட் அணிந்திருந்ததால் தாக்குதலில் இருந்து தடுத்தது” என சமூக ஊடகங்களில் எழுதினார்.