இந்தியா முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளின் வீடுகள், அலுவலங்களில் மீண்டும் சோதனை நடைபெற்று வருகிறது. என்.ஐ.ஏ, அமலாக்கத்துறை ஏற்கனவே சோதனை நடத்தி கைது நடவடிக்கை எடுத்த நிலையில் மாநில காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, உத்தரப்பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, அசாம், கர்நாடகா, மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சோதனை நடைபெறுகிறது.
என்ஐஏ வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவலின்படி, முதல்கட்ட சோதனையில் பிஎஃப்ஐ தலைவர்களிடம் நடத்திய விசாரணையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில், எட்டு மாநிலங்களில் காவல்துறை மற்றும் என்ஐஏ சோதனை நடத்தி வருகின்றன.
அசாமில் எட்டு மாவட்டங்களில் இருந்து 21 PFI உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று காலை தொடங்கிய சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல், கர்நாடகாவில், 60 PFI உறுப்பினர்கள் பாதுகாப்பு காரணங்களால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் உள்ளூர் தாசில்தார் முன் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக கடந்த செப்டம்பர் 22 ம் தேதி வியாழக்கிழமை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) மற்றும் அமலாக்க இயக்குநரகம் (இடி) கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் 93 இடங்களில் பிஎஃப்ஐக்கு எதிராக பல இடங்களில் சோதனை நடத்தியது. அதேபோல், பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, அசாம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கோவா, மேற்கு வங்காளம், பீகார் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களிலும் சோதனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.