உள்ளூர் வேலைவாய்ப்பை உருவாக்குவது ராபிடோ நிறுவனத்தை தொடர்ந்து முன்னேற்றி வருவதாக அதன் இணை நிறுவனர் அரவிந்த் சங்கா தெரிவித்துள்ளார்.


பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்து வரும் ஏபிபி நெட்வொர்க் நடத்தும் இரண்டாவது 'தி சதர்ன் ரைசிங் மாநாடு 2024' தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியால் இன்று காலை தொடங்கி வைக்கப்பட்டது. முதன்முறையாக கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்றது.


"20 லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுநர்கள்"


அதன் தொடர்ச்சியாக, ஏபிபி நெட்வர்க்கின் நடப்பாண்டிற்கான சதர்ன் ரைசிங் மாநாடு இன்று ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அரசியல், கலை, சினிமா, விளையாட்டு என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பிரபலங்கள் இதில் கலந்து கொண்டனர்.


இதில் பங்கேற்று பேசிய ராபிடோ நிறுவனத்தின் இணை நிறுவனர் அரவிந்த் சங்கா, உள்ளூர் வேலைவாய்ப்பை உருவாக்க உதவும் எங்கள் தளத்தில் 20 லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுநர்கள் பணியாற்றி வருகின்றனர் என்றார்.


தொடர்ந்து விரிவாக பேசிய அவர், "உள்ளூர் வேலைவாய்ப்பை உருவாக்குவது எங்களை தொடர்ந்து முன்னேற்றி வருகிறது. ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது" என்றார். மற்ற நிறுவனங்களில் இருந்து ராபிடோ தனித்து நிற்பதற்கான காரணத்தை விளக்கிய அவர், "ஓட்டுனர்களிடம் கமிஷன் வாங்காமல் இருப்பது ரேபிடோவை வேறுபடுத்துகிறது" என்றார்.


ராபிடோ இணை நிறுவனர் என்ன பேசினார்?


மற்ற தொழிலதிபர்கள் சமூக வலைதளத்தில் தனக்கென தனி இமேஜை உருவாக்கி வரும் நிலையில், தாங்கள் மட்டும் ஏன் சமூக வலைதளத்தில் இல்லை என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அரவிந்த் சங்கா, "சமூக ஊடகங்களால் நிறைய நன்மைகள் இருக்கின்றன. ஆனால், நான் அதைப் பயன்படுத்தவில்லை" என்றார்.


மேலும் பேசிய அவர், "வர்த்தகத்தில் AI உற்பத்தித்திறனை அதிகரிக்கும் என்று நம்புகிறேன். ஆனால், போக்குவரத்துதுறையில் இதை விட அதனால் என்ன செய்ய முடியும் என எனக்கு தெரியவில்லை" என்றார்.


முன்னதாக, மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, "வடக்கிற்கு தெற்கு எவ்வளவோ செய்கிறது. ஆனால், வடக்கு தெற்கிற்கு எதையும் செய்ய மறுக்கிறது. தெற்கில் உள்ள மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை மத்திய பாஜக அரசு குறைக்க நினைக்கிறது.


வட மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்கள் வரித் தொகையை அதிகம் வாரி வழங்குகின்றன. ஆனால், மத்திய பாஜக அரசு தென்னிந்தியாவிற்கு தேவையானவற்றை எதையும் தருவதில்லை.


ஏனென்றால், இந்த நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி, அவர் வட மாநிலத்தை சேர்ந்தவர் அதனால்தான். உத்தரபிரதேசம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்கள் மற்ற தென் மாநிலங்களை விட அதிக வருமானம் பெறுகிறது. தென்னிந்திய மாநிலங்களுக்கு  பிரதமர் மோடி பாரபட்சம் காட்டுகிறார். ஆனால் இங்குள்ள வாக்காளர்களின் வாக்குகள் மட்டுமே தங்களுக்கு வேண்டும் என்று பிரதமர் மோடி நினைக்கிறார்.” என ரேவந்த் ரெட்டி குற்றம்சாட்டினார்.