மொழியாலும் கலாசாரத்தினாலும் வேறுபடுவதால் ஒரு தேசத்தையோ ஒரு தேர்தலையோ அல்லது ஒரு மதத்தை ஒரு மொழியையோ திணிக்க முடியாது என திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி என்.வி.என். சோமு தெரிவித்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்து வரும் ஏபிபி நெட்வொர்க் நடத்தும் இரண்டாவது 'தி சதர்ன் ரைசிங் மாநாடு 2024' தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியால் இன்று காலை தொடங்கி வைக்கப்பட்டது. முதன்முறையாக கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக, ஏபிபி நெட்வர்க்கின் நடப்பாண்டிற்கான சதர்ன் ரைசிங் மாநாடு இன்று ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அரசியல், கலை, சினிமா, விளையாட்டு என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பிரபலங்கள் இதில் கலந்து கொண்டனர்.
"கூட்டாட்சியே இப்போதைய தேவை"
மாநாட்டில் கூட்டாட்சி குறித்த விவாதத்தில் பங்கேற்று பேசிய திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி என்.வி.என். சோமு, "கூட்டாட்சியே இப்போதைய தேவை. இந்தியா நாடு மட்டும் அல்ல. அது ஒரு துணை கண்டம். மாநிலங்கள் அடங்கிய ஒன்றியம். பல இனக்குழுக்கள். பல மொழிகளை கொண்டது. காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை மொழியில் இருந்து வேறுபடுகிறோம். கலாசாரத்தில் இருந்து வேறுபடுகிறோம்.
எல்லா மாநிலங்களும் தனித்துவமான காலநிலையை கொண்டுள்ளது. மொழியை கொண்டுள்ளது. எனவே, அனைத்து மாநிலங்களுக்கும் தனித்துவமான கொள்கை தேவைப்படுகிறது. எனவேதான், திமுக மாநில சுயாட்சியை மூர்க்கமாக பேசுகிறது" என்றார்.
தொடர்ந்து பேசிய திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி என்.வி.என். சோமு, "நாங்கள் வேற்றுமையில் ஒற்றுமையாக உள்ளோம். எனவே, ஒரு தேசத்தையோ ஒரு தேர்தலையோ அல்லது ஒரு மதத்தை ஒரு மொழியையோ திணிக்க முடியாது" என்றார்.
தெலங்கானா முதல்வர் பங்கேற்பு:
முன்னதாக, மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, "வடக்கிற்கு தெற்கு எவ்வளவோ செய்கிறது. ஆனால், வடக்கு தெற்கிற்கு எதையும் செய்ய மறுக்கிறது. தெற்கில் உள்ள மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை மத்திய பாஜக அரசு குறைக்க நினைக்கிறது.
வட மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்கள் வரித் தொகையை அதிகம் வாரி வழங்குகின்றன. ஆனால், மத்திய பாஜக அரசு தென்னிந்தியாவிற்கு தேவையானவற்றை எதையும் தருவதில்லை.
ஏனென்றால், இந்த நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி, அவர் வட மாநிலத்தை சேர்ந்தவர் அதனால்தான். உத்தரபிரதேசம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்கள் மற்ற தென் மாநிலங்களை விட அதிக வருமானம் பெறுகிறது. தென்னிந்திய மாநிலங்களுக்கு பிரதமர் மோடி பாரபட்சம் காட்டுகிறார். ஆனால் இங்குள்ள வாக்காளர்களின் வாக்குகள் மட்டுமே தங்களுக்கு வேண்டும் என்று பிரதமர் மோடி நினைக்கிறார்.” என ரேவந்த் ரெட்டி குற்றம்சாட்டினார்.