ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா 2023 உச்சி மாநாடு பிப்ரவரி 24, 25 அதாவது நாளை மற்றும் நாளை மறுநாள் தொடங்குகிறது. 2 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில்  "புது இந்தியா: உள்நோக்கிப் பார்ப்பது, அடைவது" என்ற தலைப்பில் சமூகத்தில் முத்திரைப் பதித்த தொழில் அதிபர்கள்,  கலை, எழுத்துத்துறைகளின் பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோர் தங்களின் கருத்துகளை பகிர்ந்துக் கொள்ள உள்ளனர். 


ஐடியாஸ் ஆஃப் இந்தியா:


இந்தியாவில் பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் மட்டுமே இருக்கும் இந்த நேரத்தில் நடைபெறும் ஏபிபி நெட்வொர்க்கின் "ஐடியாஸ் ஆஃப் இந்தியா 2023 மாநாடு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. மும்பையில் பிப்ரவரி 24-25 தேதிகளில் நடைபெறும் மாநாட்டில்,  உலக அளவில் பெரும் கவனத்தை ஏற்பட்டுள்ள சமூக - அரசியல் நிகழ்வுகளுக்கு மத்தியில் நடைபெறுகிறது. இந்த ஆண்டு உச்சிமாநாட்டில், 'புது இந்தியா: உள்நோக்கிப் பார்ப்பது, அடைவது' என்பது கருப்பொருளாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. 


ஏபிபி ஊடக குழுமத்தின் இந்த மாநாட்டில்  இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் முத்திரைப்பதித்த, தொழில்துறையைச் சேர்ந்த சாதனையாளர்கள்,  இளம் படைப்பாளர்கள், கலை மற்றும் எழுத்துத்துறையின் வெற்றியாளர்கள், பாராட்டப்பட்டவர்கள், அறிவுகூர், அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர்கள் என பல்துறை ஜாம்பவான்கள் பங்கேற்பதோடு மட்டுமல்லாமல் தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள்.


ஓலா இணை நிறுவனர் பாவிஷ் அகர்வால்:


ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா உச்சி மாநாட்டின் இரண்டாவது நாளான சனிக்கிழமை, ஓலா எலக்ட்ரிக் மற்றும் ஓலா கேப்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான பாவிஷ் அகர்வால் கலந்து கொண்டு தன்னுடைய அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொள்ள உள்ளார். "என்னுடன் பயணம் செய்: சாதித்தது எப்படி" என்ற தலைப்பில், சனிக்கிழமை மதியம் 12:15 மணி அளவில் பாவிஷ் அகர்வால் பேச இருக்கிறார்.


பாவிஷ் அகர்வால் கடந்து வந்த பயணம்:


கடந்த 2011ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், பெங்களூரில் அங்கித் பாடியுடன் இணைந்து ஓலா கேப்ஸ் நிறுவனத்தை தொடங்குவதற்கு முன்பு மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரிந்தார் பாவிஷ் அகர்வால். மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்றியபோது, இரண்டு காப்புரிமைகளை பாவிஷ் அகர்வால் தாக்கல் செய்தார். அதுமட்டும் இன்றி, சர்வதேச பத்திரிகைகளில் மூன்று கட்டுரைகளை வெளியிட்டிருந்தார்.


முன்னதாக ஆகஸ்ட் 2022ஆம் ஆண்டு, ஓலா நிறுவனம் தனது முதல் மின்சார காரை 2024இல் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அகர்வால்   அறிவித்தார். 


ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கி.மீக்கும் அதிகமான தூரம் பயணம் செய்யும் வகையில் இந்த மின்சார கார் வடிவமைக்கப்படும் என குறிப்பிட்டிருந்தார். 2026ஆம் ஆண்டிற்குள் ஒரு மில்லியன் மின்சார வாகன யூனிட்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது ஓலா எலக்ட்ரிக் நிறுவனம்.