அடுத்தாண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னோட்டமாக நாட்டின் முக்கியமான 5 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. தெலங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்கிறது.
இந்த தேர்தலின் கருத்துக்கணிப்பு முடிவுகளை ஏபிபி – சி வோட்டர் இணைந்து ஏற்கனவே வெளியிட்டிருந்த நிலையில், தற்போது இந்த மூன்று மாநில மக்களின் மன நிலையை வெளிப்படுத்தும் விதமாக தற்போது மீண்டும் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளனர்.
இதில், ஆம் ஆத்மி கட்சியால் மத்திய பிரதேச, சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தலில் தாக்கம் இருக்குமா? என்ற கேள்வி மக்களிடம் வைக்கப்பட்டது.
சத்தீஸ்கர்:
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆளுங்கட்சியான காங்கிரஸ் ஆதரவாளர்களில் 54.1 சதவீதம் பேர் ஆம் ஆத்மியின் வளர்ச்சி பா.ஜ.க.விற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளனர். 38.3 சதவீதம் பேர் இது காங்கிரஸ் கட்சியை பாதிக்கும் என்று கூறியுள்ளனர். 31.6 சதவீதம் பேர் ஆம் ஆத்மியின் வளர்ச்சி மற்றவர்களை பாதிக்கும் என்று கூறியுள்ளனர்.
அதேசமயம், பா.ஜ.க. ஆதரவாளர்களில் 30.2 சதவீதம் பேர் காங்கிரசுக்கு ஆதரவாக வாக்களிப்போம் என்றும், 17 சதவீதம் பேர் பா.ஜ.க.விற்கும், 19.1 சதவீதம் பேர் மற்றவர்களுக்கு வாக்களிப்போம் என்று தெரிவித்துள்ளனர்.
மத்திய பிரதேசம்:
மத்திய பிரதேசத்தில் 51.4 சதவீதம் பா.ஜ.க. ஆதரவாளர்கள் வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்போம் என்று கூறியுள்ளனர். 30.4 சதவீத பா.ஜ.க. ஆதரவாளர்கள் பா.ஜ.க.விற்கும், 29.2 சதவீதம் பேர் மற்ற கட்சிக்கும் வாக்களிப்போம் என்று கூறியுள்ளனர். 23.2 சதவீதம் காங்கிரஸ் கட்சியினர் தங்களது கட்சிக்கே வாக்களிப்போம் என்றும், 44.9 சதவீதம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் பா.ஜ.க.விற்கும், 32.6 சதவீதம் பேர் மற்றவர்களுக்கும் வாக்களிப்போம் என்று கூறியுள்ளனர்.
ராஜஸ்தான்:
காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் 40.9 சதவீதம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் ஆம் ஆத்மியின் வளர்ச்சி காங்கிரசை பாதிக்கும் என்று தெரிவித்துள்ளனர். 50 சதவீதம் பேர் இது பா.ஜ.க.வை பாதிக்கும் என்றும், 47.5 சதவீதம் பேர் மற்றவர்களை பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். அதேசமயம் , 29.6 சதவீத பா.ஜ.க. ஆதரவாளர்கள் ஆம் ஆத்மியின் வளர்ச்சி காங்கிரசை பாதிக்கும் என்றும், 20 சதவீதம் பேர் இது பா.ஜ.க.வை பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
சட்டமன்ற தேர்தல் நடைபெறும் மிசோரம் மாநிலத்தில் ஒரே கட்டமாக வரும் நவம்பர் 7-ந் தேதியும், மத்திய பிரதேசத்தில் நவம்பர் 17-ந் தேதியும், ராஜஸ்தானில் நவம்பர் 23-ந் தேதியும் நடக்கிறது. தெலங்கானாவில் நவம்பர் 30-ந் தேதியும், சத்தீஸ்கரில் இரண்டு கட்டங்களாக வரும் வரும் நவம்பர் 7-ந் தேதியும் மற்றும் நவம்பர் 17-ந் தேதியும் நடக்கிறது. இந்த 5 மாநிலங்களிலும் நடைபெற்ற வாக்குப்பதிவுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் டிசம்பர் 3-ந் தேதி நடக்கிறது.