உக்ரைன் போர் ஏற்கனவே தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் தொடங்கியுள்ள போர் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. 


ஐந்து மாநில தேர்தல்:


இச்சூழலில், இந்தியாவில் ஐந்து மாநில தேர்தல் வரும் நவம்பர் 7ஆம் தேதி தொடங்குகிறது. மிசோரம் மற்றும் சத்தீஸ்கரின் முதல் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 7ஆம் தேதி நடைபெற உள்ளது. மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 17ஆம் தேதியும், நவம்பர் 25இல் ராஜஸ்தானிலும் நவம்பர் 30ஆம் தேதி, தெலங்கானாவிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வரும் டிசம்பர் 3ஆம் தேதி, வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.


அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னோட்டமாக ஐந்து மாநில தேர்தல் கருதப்படுகிறது.


இந்த தேர்தலில், இஸ்ரேல் - ஹமாஸ் போர் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. இந்த கேள்வியை முன்வைத்து ஏபிபி - சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளது.


தாக்கத்தை ஏற்படுத்துமா இஸ்ரேல்-ஹமாஸ் போர்?


மத்தியப் பிரதேசத்தில், மொத்தம் 31.9 சதவீதம் பேர் இஸ்ரேல்-ஹமாஸ் போர் வரவிருக்கும் தேர்தல்களில் ஒரு காரணியாக மாறி பாஜகவுக்கு பயனளிக்கும் என்று நம்புகின்றனர். இஸ்ரேல்-ஹமாஸ் போர் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தி, காங்கிரஸுக்கு பயனளிக்கும் என்று 23.8 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். 


மறுபுறம், பதிலளித்தவர்களில் 33.4 சதவீதம் பேர், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போர் எந்த விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது என கருத்து தெரிவித்துள்ளனர்.


ராஜஸ்தானில், 37.7 சதவீதம் பேர் இஸ்ரேல்-ஹமாஸ் போர் வரவிருக்கும் தேர்தல்களில் ஒரு காரணியாக மாறி பாஜகவுக்கு பயனளிக்கும் என்று நம்புகின்றனர். இஸ்ரேல்-ஹமாஸ் போர் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தி, காங்கிரஸுக்கு பயனளிக்கும் என்று 17.2 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். பதிலளித்தவர்களில் 35 சதவீதம் பேர், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போர் எந்த விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது என கருத்து தெரிவித்துள்ளனர்.


மக்களின் கருத்து என்ன?


சத்தீஸ்கரில், 31.6 சதவீதம் பேர் இஸ்ரேல்-ஹமாஸ் போர் வரவிருக்கும் தேர்தல்களில் ஒரு காரணியாக மாறி பாஜகவுக்கு பயனளிக்கும் என்று நம்புகின்றனர். இஸ்ரேல்-ஹமாஸ் போர் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தி, காங்கிரஸுக்கு பயனளிக்கும் என்று 17.9 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். பதிலளித்தவர்களில் 37.7 சதவீதம் பேர், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போர் எந்த விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது என கருத்து தெரிவித்துள்ளனர்.


கடந்த 7ஆம் தேதி, இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே மோதல் தொடங்கியது. காசா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பு, 5,000 ராக்கெட்டுகளை கொண்டு இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தியது.


அதுமட்டும் இன்றி காசா பகுதியில் இருந்து ஆயுதம் ஏந்திய சிலர் இஸ்ரேலுக்குள் புகுந்து அப்பாவி மக்களை கொன்று குவித்து வருவதாக செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது. அதேபோல, காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் மீது மட்டும் இன்றி அப்பாவி மக்கள் மீதும் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.


இந்த தாக்குதலில் பாலஸ்தீன காசா பகுதியில் மட்டும் 2,200க்கும் மேற்பட்டோர் பேர் கொல்லப்பட்டுள்னர். கொல்லப்பட்டவர்களில் 614 குழந்தைகளும் 370 பெண்களும் அடங்குவர். இஸ்ரேலில் 265 ராணுவ வீரர்கள் உள்பட 1300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 3,300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.