புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்ட தாக்குதலில்,  2019-ம் ஆண்டு பிப்ரவரி 27- தேதி இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் போர் விமானத்தை வீரர் அபிநந்தன் மிக் 21 ரக விமானத்தில் விரட்டிச் சென்று சுட்டு வீழ்த்தினார். ஆனால், அவர் தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்துவிட அதனைத் தொடர்ந்து நடந்த சம்பவங்கள் இந்திய வரலாற்றின் திக் திக் நிமிடங்கள்.


அபிநந்தனுக்காக 100 கோடி மக்களும் குரல் கொடுக்க ஒருவழியாக மீண்டு வந்தார் அபிநந்தன். தமிழகத்தைச் சேர்ந்த கமாண்டர் அபிநந்தனுக்கு இன்று வீர் சக்ரா விருது வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கவுரவிக்கிறார். இந்த நாளில் நாம் அபிநந்தனைப் பற்றி நாம் சற்றே நினைவலைகளைப் பட்டைத் தீட்டிப் பார்ப்போமா?


புல்வாமா தாக்குதல்:


ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் ஸ்ரீநகர் ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில், சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது 2019 பிப்ரவரி 14 ஆம் நாள் நடந்த தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் 40 பாதுகாப்புப் படையினரும், தற்கொலை தீவிரவாதி ஒருவரும் உயிரிழந்தனர். இத்தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதக் குழு பொறுப்பேற்றது.


2019 புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அழித்தது. இதைத் தொடர்ந்து பாக்கித்தான் விமானம் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தது. அப்போது அந்த விமானங்கள் சில சுட்டு வீழ்த்தப்பட்டன. இந்தியாவும் பாகிஸ்தானும் பிரச்சனைக்குரிய காஷ்மீர் பகுதி மற்றும் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிகளில் வான்வழித் தாக்குதல்களில் ஈடுபட்டன.


பிப்ரவரி 27 ஆம் தேதியன்று மிக்-21 ரக விமானத்தில் பறந்து கொண்டிருந்தபோது பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்துவிட்டார் அபிநந்தன். அவரது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதிலிருந்து பேராசூட்டின் மூலம் அபிநந்தன் தரை இறங்கினார். ஆனால், அவர் இறங்கியிருந்தது பாகிஸ்தான் மண். 


அங்கிருந்தவர்கள் அபிநந்தனை சூழ்ந்து தாக்கினர். அதற்குள் ராணுவத்துக்கு தகவல் சென்று சேர. அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தின் வசம் சென்றார்.


அபிநந்தன் தாக்கப்பட்ட காட்சிகளும், அவர், பாகிஸ்தான் ராணுவத்தினரால் விசாரிக்கப்பட்ட காட்சிகளும் வெளியாகின. ஒட்டுமொத்த தேசமும் அபிநந்தனுக்காக பிரார்த்தனை செய்தது. அபிநந்தனை மீட்க வேண்டும் என இந்திய அரசு முயற்சி செய்தது. இந்தியா பல்வேறு நாடுகளிடமும் இது குறித்து அழுத்தம் கொடுத்தது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் சமரச முயற்சியில் ஈடுபட்டன. 




பல்வேறு வகையிலான முயற்சிகளுக்குப் பின்னர், 2019 மார்ச் 1 அன்று வாகா எல்லையின் வாயிலாக அபிநந்தன் விடுவிக்கப்பட்டார். அபிநந்தன் விடுதலையான பின்னர், சில காலம் ராணுவக் கட்டுப்பாட்டில் இருந்தார். அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அவருக்கு தீவிர மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பின்னர், அவர் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டார். விங் கமாண்டராக இருந்த அவர் மேற்கு மண்டலத்தின் கமாண்டராக நியமிக்கப்பட்டார்.


அபிநந்தனுக்கு இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அபிநந்தனுக்கு இன்று வீர் சக்ரா விருது வழங்கி கவுரவித்தார்.


இதுமட்டுமின்றி ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளை முறியடித்ததற்காக, இந்திய விமானப்படையின் மூத்த அதிகாரி பிரகாஷ் ஜாதவுக்கு, இரண்டாவது மிக உயர்ந்த வீர விருதான கீர்த்தி சக்ரா வழங்கப்பட்டது. அவரது மறைவுக்குப் பின்னர் இந்த விருது வழங்கப்பட்டது.