ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்கும் விவகாரத்தில் டெல்லி அரசுக்கும் மத்திய அரசின் பிரதிநிதியான துணை நிலை ஆளுநருக்கும் இடையே அதிகார போட்டி நிலவி வந்தது. அதை தீர்க்கும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 


ஆளுநர் vs டெல்லி அரசு:


இந்த சட்ட போராட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான மாநில அரசுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மக்களின் விருப்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சட்டம் இயற்றும் அதிகாரம் டெல்லி சட்டப்பேரவைக்கு வழங்கப்பட்டுள்ளது என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளித்தது. 


இதையடுத்து, ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் உள்ளிட்ட மாநில அரசின் நிர்வாக அதிகாரங்களை கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தது. அதன்படி, டெல்லி அரசில் அதிகாரிகளின் நியமனம், பணியிடமாற்றம் போன்ற விஷயங்களில் முடிவு எடுக்கும் அதிகாரம் துணை ஆளுநருக்கு வழங்கப்பட்டது.


உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, மாநில அரசின் அதிகாரங்களை நிலைநாட்டிய நிலையில், மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டம், டெல்லியின் துணைநிலை ஆளுநருக்கு அதிக அதிகாரம் வழங்கியது. இந்த நிலையில், அவசர சட்டத்திற்கு எதிராக டெல்லி அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.


வியூகம் அமைத்த அரவிந்த் கெஜ்ரிவால்:


டெல்லி அவசர சட்ட விவகாரத்தில் நாட்டின் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆதரவை கோரி வருகிறார் அரவிந்த் கெஜ்ரிவால். மக்களவையில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை இருப்பதால், டெல்லி துணை நிலை ஆளுநருக்கு அதிக அதிகாரம் வழங்கும் மசோதாவை மாநிலங்களவையில் கொண்டு வரும்போது, எதிர்க்கட்சிகளின் உதவியோடு அதை தோற்கடிக்க அரவிந்த் கெஜ்ரிவால் திட்டமிட்டு வருகிறார்.


அதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், தெலங்கானா முதலமைச்சர் கே.சி.ஆர் ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார். 


இந்த விவகாரம் பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சி கூட்டத்திலும் எதிரொலித்தது. அவசர சட்டத்திற்கு எதிரான தங்களின் நிலைபாட்டுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என ஆம் ஆத்மி வலியுறுத்தியது. ஆனால், நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்கு முன்னதாகவே இதுபோன்ற பிரச்னைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பதில் அளித்தார்.


இந்த விவகாரத்தில், பாஜகவுடன் காங்கிரஸ் டீலிங் வைத்திருப்பதாகவும் அதனால்தான் காங்கிரஸ் முடிவு எடுக்கவில்லை என்றும் ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியது. மத்திய அரசின் சர்ச்சைக்குரிய அவசர சட்டத்தை காங்கிரஸ் பகிரங்கமாக எதிர்க்கும் வரை எதிர்கால எதிர்க்கட்சி கூட்டங்களில் பங்கேற்க முடியாது என ஆம் ஆத்மி அறிவித்தது. இது, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் பின்னடைவை ஏற்படுத்தியது.