மக்களவை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், பாஜக தலைமையிலான மத்திய அரசை வீழ்த்த இந்தியா (எதிர்க்கட்சிகள்) கூட்டணி பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இந்தியா கூட்டணியின் முதல் கூட்டம் பிகார் மாநிலம் பாட்னாவிலும் இரண்டாவது கூட்டம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்றது.
தேர்தலுக்கு தயாரான எதிர்க்கட்சிகள் கூட்டணி:
இதை தொடர்ந்து, மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் மூன்றாவது கூட்டம் நடைபெறுகிறது. இதற்காக எதிர்க்கட்சிகள் தயாராகி வரும் நிலையில், கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சிகள் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்து கொண்டது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கரில் இந்தாண்டின் இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், சத்தீஸ்கரில் உள்ள அரசு பள்ளிகள், மோசமான நிலையில் இருப்பதாக டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.
சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "சத்தீஸ்கரில் அரசுப் பள்ளிகள் மோசமான நிலையில் இருப்பதாக ஒரு செய்தியைப் படித்துக் கொண்டிருந்தேன். பல பள்ளிகளை மூடிவிட்டனர். 10 வகுப்பறைகளை கொண்டு மட்டுமே பள்ளிகள் இயங்குகின்றன. அங்கு, ஆசிரியர்கள் மட்டுமே இருக்கின்றனர். மாணவர்கள் இல்லை. பல ஆசிரியர்களுக்கு சம்பளமும் கிடைக்கவில்லை.
ஆம் ஆத்மி மாடலா? காங்கிரஸ் மாடலா?
டெல்லியில் உள்ள அரசுப் பள்ளிகளின் நிலையைப் பாருங்கள். அல்லது டெல்லியில் தங்கியிருக்கும் உங்கள் உறவினர்களிடம் கேளுங்கள். சுதந்திரத்திற்குப் பிறகு முதல்முறையாக கல்வித்துறைக்கு இவ்வளவு நல திட்டங்களை அமல்படுத்தும் அரசு வந்துள்ளது. நாங்கள் அரசியல்வாதிகள் அல்ல. உங்களைப் போன்று சாதாரண மக்கள்" என்றார். சத்தீஸ்கரில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் கெஜ்ரிவால் உறுதியளித்தார்.
இதற்கு பதிலடி தந்த காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா, "ஏன் ராய்ப்பூருத்து செல்ல வேண்டும்? நமது சத்தீஸ்கர் அரசின் செயல்பாடு முந்தைய ராமன் சிங் (பாஜக) அரசாங்கத்துடன் ஒப்பிடப்பட வேண்டும். உங்களுக்கு விருப்பமான ஒரு துறையைத் தேர்ந்தெடுத்து, டெல்லியில் காங்கிரஸ் அரசாங்கத்தின் செயல்திறனையும் உங்கள் அரசாங்கத்தையும் இங்கே ஒப்பிட்டுப் பார்ப்போம். விவாதத்திற்கு தயாரா?" என எக்ஸ் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியா கூட்டணியில் குழப்பம்:
காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் ஒருவரை ஒருவர் விமர்சித்து கொண்டது இந்தியா கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரண்டு கட்சிகளும் பரஸ்பரம் விமர்சித்து கொள்வது இது முதல் முறை அல்ல.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அல்கா லம்பா தெரிவித்த கருத்து, சமூபத்தில் சர்ச்சையை கிளப்பியிருந்தது. அடுத்த ஆண்டு டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் போட்டியிடத் தயாராகுமாறு கட்சி தலைவர்களை அவர் கேட்டு கொண்டார். இது இரு கட்சிகளிடையே உரசலை ஏற்படுத்தியது.