தனது மகள் உத்தரப் பிரதேசக் காவல்துறையில் டி.எஸ்.பியாகப் பொறுப்பேற்றதைப் பெருமிதத்தோடு ஏற்றுக் கொண்டிருக்கிறார் மூத்த காவல்துறை அதிகாரி ஏ.பி.எஸ். நிம்பாடியா. இந்தியா திபெத் எல்லையோரக் காவல்துறையினரின் டி.ஐ.ஜி அதிகாரியான நிம்பாடியாவும், அவரது மகள் அபெக்‌ஷாவும் ஒருவரை ஒருவர் பார்த்து, சல்யூட் அடித்துக் கொள்ளும் படங்கள் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவின. இந்தப் படம் அபெக்‌ஷா டி.எஸ்.பியாக நியமிக்கப்பட்ட பட்டமளிப்பு விழாவில் எடுக்கப்பட்டது.


உத்தரப் பிரதேசத்தின் மொரதாபாத் மாவட்டத்தில் உள்ள டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் காவல்துறை அகாடமியில் பயிற்சி பெற்று, தேர்ச்சியடைந்துள்ளார் அபெக்‌ஷா நிம்பாடியா. அவரது பட்டமளிப்பு நிகழ்ச்சியின் போது, அவரது தந்தையும், இந்தியா திபெத் எல்லையோரக் காவல்துறையினரின் டி.ஐ.ஜி அதிகாரியுமான நிம்பாடியாவும், அவரது தாய் பிம்லேஷ் ஆகியோரும் கலந்துகொண்டனர். 



தந்தை நிம்பாடியாவுடன் டிஎஸ்பி அபெக்‌ஷா


 


இந்திய திபெத் எல்லையோரக் காவல்துறையினரின் தொண்டு நிறுவனமான ஹிம்வீர் வைவ்ஸ் வெல்ஃபேர் அசோசியேஷன் என்ற அமைப்பின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அபெக்‌ஷாவும், அவரது டி.ஐ.ஜி தந்தையும் ஒருவருக்கு ஒருவர் சல்யூட் அடித்துக் கொள்ளும் படங்கள் வெளியிடப்பட்டன. இந்தப் படங்களை இந்திய திபெத் எல்லையோரக் காவல்துறையின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படங்களில் அப்பாவும், மகளும் கம்பீரமாக காவல்துறை உடையில் இருப்பதைப் பாராட்டுகளோடும், நெகிழ்ச்சியோடு நெட்டிசன்கள் வைரல் பதிவாக மாற்றி வருகிறார்கள். 


இந்திய திபெத் எல்லையோரக் காவல்துறையின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் `பெருமை கொண்ட அப்பா தன் பெருமை கொண்ட மகளிடம் சல்யூட் பெறும் தருணம்’ என்று இந்தப் படத்தைக் குறித்து குறிப்பு வெளியிட்டுள்ளது. 






கடந்த ஆகஸ்ட் மாதம், இந்திய திபெத் எல்லையோரக் காவல்துறையின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட பெண்களுள் ஒருவராக திக்‌ஷா குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் முசூரியில் உள்ள காவல்துறை அகாடமியில் பயிற்சி பெற்றவர். திக்‌ஷா குமார் இந்திய திபெத் எல்லையோரக் காவல்துறையின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட போது, காவல் ஆய்வாளரான அவரது தந்தை தனது சீருடை அணிந்துகொண்டு அவருக்கு சல்யூட் அடித்த படங்களும் இதே போல வைரல் ஆகின. 



குஜராத்தில் சல்யூட் அடித்த தாயும் மகனும்


 


இதே போன்ற மற்றொரு சம்பவத்தில், ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஆய்வாளரான தந்தை டி.எஸ்.பியான தனது மகளுக்குக் காவல்துறையினரின் சந்திப்பு ஒன்றில் சல்யூட் அடித்ததும், குஜராத் மாநிலத்தில் டி.எஸ்.பியாகப் பதிவேற்ற தனது மகனுடன் இதே போல சல்யூட் அடித்த துணை உதவி ஆய்வாளரான தாயின் படமும் நெட்டிசன்கள் பலரின் மனதையும் கவர்ந்தன. 


தனது மகளின் பதவியேற்பின் போது சல்யூட் அடித்துக் கொண்ட தந்தை மகள் இருக்கும் படங்கள் தற்போது பல ஆயிரம் லைக்ஸ் பெற்றுள்ளதோடு, மக்களின் இதயங்களைக் கொள்ளையடித்துள்ளதாக கமெண்ட்களையும் பெற்றுள்ளது.