காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது சகோதரி பிரியங்கா வத்ராவுடன் ஸ்னோமொபைலில் பயணம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 







காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த வாரம் ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்மார்க்கில் தனது சகோதரி பிரியங்கா வத்ராவுடன் ஸ்னோமொபைலில் பயணம் செய்தார். ட்விட்டர் பயனரால் பகிரப்பட்ட காணொளியில், பிரபலமான சுற்றுலா தளத்தில் அடர்ந்த பனியால் மூடப்பட்ட வெள்ளை நிலப்பரப்பில் ராகுல் காந்தி தனது சகோதரியுடன் பயணம் செய்வது போலும், உடன் பனிச்சறுக்கு வீரர்கள் மற்றும் பலர் ஸ்னோமொபைலில் பயணம் செய்வது போலும் அந்த காட்சியில் இடம்பெற்றுள்ளது.


இந்திய இளைஞர் காங்கிரஸின் தேசியத் தலைவர் ஸ்ரீனிவாஸ் பிவி, ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் மாறி மாறி ஸ்னோமொபைல் வாகனத்தை ஓட்டுவதும்,  மற்றவர் பில்லியன் சவாரி செய்யும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். பாரத் ஜோடோ யாத்திரை முடிந்த பின் இருவரும் ஜம்மு காஷ்மிருக்கு சுற்றுப்பயணம் சென்ற போது இந்த நிகழ்வு நிகழ்ந்துள்ளது.  


146 நாட்கள் நடந்த இந்திய ஒற்றுமை பயணம் ஜனவரி 30ஆம் தேதி நிறைவு பெற்றது. இந்த நடைபயணத்தில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்தன. நடப்பாண்டின் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பாதி பிப்ரவரி 13ஆம் தேதி நிறைவு பெற்றது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பாதி நிறைவு பெற்ற நிலையில், தனிப்பட்ட முறையில் ஜம்மு காஷ்மீருக்கு இரண்டு நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளார். தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள குல்மார்க் நகரில் தங்கியுள்ளார். குல்மார்க் செல்லும் வழியில் தாங்மார்க் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி உள்ளார் ராகுல் காந்தி.