நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை கட்டுக்கடங்காமல் அதிகரித்துவரும் நிலையில் வருகின்ற மே மாதம் தொடங்கி 18 வயது முதல் 45 வயது நபர்களுக்கும் இனி தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதே சமயம் தடுப்பூசி உற்பத்தி மற்றும் கொள்முதல் குறித்தும் பல்வேறு மாற்றங்களை மத்திய அரசு அறிவித்திருந்தது.

Continues below advertisement

அதன்படி தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்கள் தங்களது மாதாந்திர உற்பத்தியில் 50 சதவிகிதத்தை மத்திய அரசுக்கு நேரடியாக அளிக்கவேண்டும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான மத்திய அரசின் இலவச கொரோனா தடுப்பூசி திட்டம் தொடரும், அதேசமயம்  மாநில அரசும் தனியார் மருத்துவ நிறுவனங்களும் தடுப்பூசி நிறுவனங்களிடமிருந்து நேரடியாக மருந்துகளை கொள்முதல் செய்துகொள்ளலாம். அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள் சந்தையில் (Open market) நிர்ணயிக்கப்பட்ட விலையில் தடுப்பூசி மருந்துகளை விற்கலாம் எனக் குறிப்பிட்டிருந்தது.

Continues below advertisement

அரசின் இந்த அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொரோனாவுக்கு எதிராக வெகுஜன தடுப்பூசித் திட்டத்தைச் செயல்படுத்தவேண்டும் (Universal Mass Vaccination Programme) என அறிக்கை வெளியிட்டுள்ளது.

கட்சியின் பொலிட்பீரோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அரசின் புதிய தடுப்பூசி கொள்கை, அவர்கள் உருவாக்கிய சுகாதார நெருக்கடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள மேற்கொண்டிருக்கும் முயற்சி. மேலும் முழுப் பொறுப்பையும் தட்டிக்கழிக்கும் வகையில் மாநில அரசுகளிடம் தங்களது கடமையை மத்திய அரசு ஒப்படைத்துள்ளது. மேலும் சந்தை விற்பனை அறிவிப்பால் தடுப்பூசி விற்பனையைத் தாராளமயமாக்குவதற்கும் அதன் விலை நிர்ணயத்தில் குளறுபடி ஏற்படுவதற்கும் இது வழிவகுக்கும். தடுப்பூசி வாங்கும் பொருளாதாரச் சூழல் இல்லாத கோடிக்கணக்கான மக்களின் சுகாதாரப் பாதுகாப்பு இந்த புதிய கொள்கையில் புறந்தள்ளப்பட்டுள்ளது. இதனால் மிகப்பெரும் அளவிலான தடுப்பூசிகளுக்கான கருப்புச்சந்தை உருவாகும். இந்த பாரபட்சம் மிகுந்த தடுப்பூசி கொள்கையை சிபிஐ(எம்) வன்மையாகக் கண்டிக்கிறது. மாறாக உலகளாவிய வெகுஜன தடுப்பூசித் திட்டம் மட்டுமே இந்த அவசரகால தேவையைப் பூர்த்தி செய்யமுடியும்” எனக் குறிப்பிட்டுள்ளது.