அம்மாவின் நிபந்தனையற்ற, அழிவில்லா அன்பைப் போலவே இருக்கக் கூடியது அக்காவுக்குத் தம்பி மீது இருக்கும் பேரன்பு. நாம் தற்போது யாரையேனும் அன்புக்குரியவர்களை மிஸ் செய்தால் அவர்களுக்கு போன் செய்து பேசுவதோ, ஒரு மெசேஜ் அனுப்பி பேசுவதோ வழக்கம். ஆனால் கேரளாவில் உள்ள ஒரு அக்கா தனது தம்பிக்காக உலக சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். 


கேரளாவின் இடுக்கி மாவட்டத்தின் பீர்மேட் பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான கிருஷ்ணப்ரியா இந்த ஆண்டு சகோதரர்கள் தினத்தின் போது, தனது தம்பியுடன் இருக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மாணவராகக் கல்வி பயின்று வரும் 21 வயதான அவரது தம்பி கிருஷ்ணபிரசாத் கிருஷ்ணப்ரியாவுக்கு வாழ்த்துகள் தெரிவித்து மெசேஜ்களை அனுப்பியுள்ளார். எனினும், கிருஷ்ணப்ரியா பணியில் மும்முரமாக இருந்ததால், தன் தம்பிக்கு வாழ்த்து தெரிவிக்க மறந்துள்ளார். தன் தம்பி அனுப்பிய மெசேஜ்களுக்கும் அவர் பதில் அனுப்பாததால், கோபம் கொண்ட அவரது தம்பி கிருஷ்ணபிரசாத் அவரை வாட்சாப்பில் ப்ளாக் செய்துள்ளார். 


இதுகுறித்து பேசிய கிருஷ்ணப்ரியா, `நான் அவனுக்கு வாழ்த்து தெரிவிக்க மறந்துவிட்டேன்., வழக்கமாக சகோதரர்கள் தினத்தின் போது, அவனுக்கு போன் கால் அல்லது மெசேஜ் அனுப்புவேன்.. இந்த ஆண்டு என் பணியின் காரணமாக மறந்துவிட்டேன்.. அவனுக்குப் பிறரிடம் இருந்து வந்த வாழ்த்துகளை ஸ்க்ரீன்ஷாட்களாக எனக்கு அனுப்பியிருந்தார். நாங்கள் இருவரும் தாய் - மகன் உறவைப் போல இருந்து வருகிறோம். அவன் என்னிடம் பேசாததாலும், என்னை வாட்சாப்பில் ப்ளாக் செய்ததாலும் நான் மிகுந்த கவலை கொண்டேன்’ எனக் கூறியுள்ளார். 



தனது தவறை சரிசெய்ய நினைத்த கிருஷ்ணப்ரியா, கடந்த மே 25 அன்று முதல் தன் தம்பிக்குக் கடிதம் ஒன்றை எழுதத் தொடங்கினார். முதலில் ஏ4 பேப்பர் ஒன்றில் கடிதத்தை எழுதத் தொடங்கிய அவர், தான் எழுத நினைக்கும் அனைத்தையும் எழுதுவதற்கு மேலும் காகிதம் தேவைப்படும் என உணர்ந்துள்ளார். 


`எனக்கு நீளமான காகிதம் தேவைப்பட்டது. அவற்றை வாங்குவதற்காக கடைக்குச் சென்றேன்.. நீளமான காகிதங்கள் பில் ரோல்களாக மட்டுமே விற்கப்படுவதாகக் கூறினர். எனவே அதில் 15 ரோல்களை வாங்கி, ஒவ்வொன்றிலும் எழுதத் தொடங்கி, சுமார் 12 மணி நேரங்கள் எழுதிக் கடிதத்தை முடித்தேன்’ எனக் கூறுகிறார் கிருஷ்ணப்ரியா. 


எழுதி முடித்த பிறகு, அஞ்சல் அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லும் முன், அனைத்து காகித ரோல்களையும் அடுக்குவது அவருக்குச் சவாலாக அமைந்துள்ளது. `ஒவ்வொரு ரோலும் சுமார் 30 மீட்டர்கள் இருந்ததால் அவற்றை பேக் செய்வது பெரிய சவாலாக அமைந்தது. செல்லோ டேப், பசை முதலானவற்றைப் பயன்படுத்தி ஒரு பெட்டிக்குள் கடிதத்தை மொத்தமாக அடைத்தேன்’ எனத் தெரிவித்துள்ளார் கிருஷ்ணப்ரியா. 



அஞ்சல் அலுவலகத்தில் இந்தப் பார்சலை எந்தக் கேள்வியும் இல்லாமல் பெற்றதாகவும், மொத்தமாக சுமார் 5.27 கிலோ எடை கொண்டதாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். 


இரண்டு நாள்களுக்குப் பிறகு, லெட்டரைப் பெற்ற கிருஷ்ணபிரசாத், முதலில் அதனைப் பிறந்த நாள் பரிசு என நினைத்துள்ளார். மேலும், கடிதத்தைப் பிரித்த பிறகு, கிருஷ்ணபிரசாத் குழப்பமடைந்ததாகவும் கிருஷ்ணப்ரியா கூறியுள்ளார். 


உலகிலேயே இதுவரை எழுதப்பட்ட கடிதங்களிலேயே மிக நீளமான கடிதமாக தன் கடிதத்தை ஏற்கக் கோரி கின்னஸ் உலக சாதனைகளுக்காக விண்ணப்பித்துள்ளார் கிருஷ்ணப்ரியா.