ராணுவ தின வரலாற்றில் முதல்முறையாக ராணுவ தின அணிவகுப்பு டெல்லிக்கு வெளியே நடைபெற உள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள எம்இஜி மையத்தில் உள்ள மைதானத்தில் இந்த அணுவகுப்பு நடைபெறுகிறது.


கடந்த 1949ஆம் ஆண்டு முதல் ராணுவ தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 75ஆவது ராணுவ தினமான இன்று வரலாற்றில் முதல்முறையாக டெல்லிக்கு வெளியே ராணுவ தின அணிவகுப்பு நடைபெறுகிறது. இது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.


இந்த அணிவகுப்பை ராணுவ தளபதி மனோஜ் பாண்டே நேரில் பார்வையிட்டு, வீர தீர செயலுக்கான விருதை அளிக்க உள்ளார். இதை தொடர்ந்து, டோர்னாடோஸின் ராணுவ சேவை படை மோட்டார் சைக்கிளை கொண்டு சாகசத்தில் ஈடுபட உள்ளனர்.


பின்னர், பாராட்ரூப்பர்களின் ஸ்கை டைவிங் ஷோ, ராணுவ விமானப் படையின் ஹெலிகாப்டர் சாகச ஷோ ஆகியவை நடைபெற உள்ளது.


கடந்த 1949 ஆம் ஆண்டு, ஜெனரல் (பிற்காலத்தில் பீல்ட் மார்ஷல்) கே.எம். கரியப்பா, ஆங்கிலேய ராணுவத்தின் கடைசி தலைமைத் தளபதியான ஜெனரல் சர் பிரான்சிஸ் ராபர்ட் ராய் புச்சரிடமிருந்து இந்திய ராணுவத்தின் தளபதியாகப் பொறுப்பேற்ற நிகழ்வின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15 அன்று ராணுவ தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியர் ஒருவர், ராணுவ தளபதியாக பொறுப்பேற்பது இதுவே முதல்முறை.


சமூகத்துடன் ஆழமான தொடர்பை எளிதாக்கும் வகையில் இந்தியாவின் பல்வேறு ஃபில்டு கமெண்டுகளில் அணுவகுப்பு நடத்தப்படும். 


இந்த ஆண்டு, புனேவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தெற்கு கமாண்டின் மேற்பார்வையில் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.


2023ஆம் ஆண்டுக்கு முன்பு டெல்லி கண்டோன்மென்ட்டில் உள்ள கரியப்பா பரேட் மைதானத்தில் ராணுவ தின அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம்.


 






கடந்த ஆண்டு, வருடாந்திர விமானப்படை தினத்திற்கான அணிவகுப்பை டெல்லிக்கு அருகிலுள்ள ஹிண்டன் விமான தளத்திலிருந்து சண்டிகருக்கு மாற்றி இந்திய விமான படை நடத்தியது.