கர்நாடக மாநிலத்தில் பிரதமர் மோடியின் பிரச்சாரத்தின்போது அவர் மீது மொபைல் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளுக்குமான பொதுத்தேர்தல் வரும் மே மாதம் 10-ஆம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. ஒருவர் பெரும்பான்மையை பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டுமென்றால் குறைந்தபட்சம் 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும். கர்நாடகாவில் 5.21 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2.62 கோடி ஆண் வாக்காளர்களும், 2.59 கோடி பெண் வாக்காளர்களும் உள்ளனர். 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டில் இருந்தே வாக்கு அளிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மே 13-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை என அறிவிக்கப்பட்டுள்ளது.


தேர்தல் நடக்க இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகள் தரப்பில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மே 10 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க கர்நாடகா மாநிலத்திற்கு இந்த ஆண்டு பல முறை பயணம் மேற்கொண்டுள்ளார். 


பிரதமர் நரேந்திர மோடி தனது பிரச்சார சுற்றுப்பயணத்தின் இரண்டாவது நாளான நேற்று மெகா ரோட்ஷோ மற்றும் தேர்தல் பிரச்சாரங்களில் கலந்து கொண்டார். தனது சூறாவளி பயணத்தின் போது, ​​பிரதமர் மைசூருவில் ஆறு பொது பேரணிகளில் உரையாற்றினார். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாரதிய ஜனதா கட்சியின் பிரச்சாரத்தை ஆதரிக்க மைசூருவில் பிரதமர் மோடி ஆதரவாளர்களைச் சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்ட போது, ​​அவரது கான்வாய் மீது கூட்டத்தினுள் இருந்து அடையாளம் தெரியாத நபர் ஒரு கைப்பேசியை வீசினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. காவல் துறையினரின் விசாரணைக்குப் பிறகு, பிரதமர் மீது பூக்களை வீசியபோது கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவர் தவறுதலாக மொபைலை வீசியதாகத் தெரிய வந்துள்ளது. போலீசாரின் கூற்றுப்படி, பிரதமர் மோடியை கண்ட உற்சாகத்தில் கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் பூக்களை தூவிய போது கையில் இருந்த மொபைல் தவறுதலாக வீசப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் ரோட்ஷோ மைசூரு நகரில் பல்வேறு பகுதிகள் வழியாக சென்றது. ரோட்ஷோவின் போது, ​​பிரதமர் மைசூருவின் பாரம்பரிய 'பேட்டா' மற்றும் காவி சால்வை அணிந்திருந்தார். சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பெருந்திரளான மக்களை நோக்கி கை அசைத்தப்படி பேரணியை மேற்கொண்டார்.