குஜராத் மாநிலத்தில் லிஃப்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் அதில் இருந்த நபர் நூழிலையில் உயிர் தப்பிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
படி வேண்டாம்.. லிஃப்ட் போதும்
தொழில்நுட்ப வளர்ச்சியால் முன்பு நாம் செய்த செயல்கள் பல மாறி வருகின்றன. முன்பெல்லாம் எத்தனை மாடி கட்டிடம் என்றாலும் படியேறி நடப்போம். ஆரோக்கியத்துக்கு நல்லது என அது கடினமாக இருந்தாலும் நமக்கு நாமே சமாதானம் செய்து கொள்வோம். ஆனால் காலப்போக்கில் கிராமம் வரையிலான கட்டடங்களுக்கு லிஃப்ட் வசதி வந்து விட்டது. இதனால் ஒரு மாடி என்றால் கூட படியேறாமல் லிஃப்ட் பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளோம்.
இதனால் நாம் நடப்பது, படியேறுவது என்பது குறைந்து விட்டது. அதேசமயம் லிஃப்டில் பயணிக்கும்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு சிக்கி விட்டால் அவ்வளவு தான். உயிர்பயம் வந்து விடும். சில இடங்களில் கஷ்டப்பட்டு மீட்கப்படும் காட்சிகளும், சில நேரங்களில் உயிரிழப்புகளும் நிகழ்கிறது.
குஜராத்தில் ஷாக் சம்பவம்
இந்த நிலையில் இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அங்குள்ள வல்சாத் பகுதியில் சர்தார் ஹைட்ஸ் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இங்கு குடியிருப்புவாசிகள் பயன்படுத்த லிஃப்ட் வசதியும் செய்யப்பட்டிருந்தது. இதனிடையே அங்குள்ள சபர்மதி கட்டிடத்தில் ஒரு நபர் லிஃப்டில் தரைத்தளத்தில் இருந்து தனது தளத்திற்கு சென்றுள்ளார். குறிப்பிட்ட தளம் வந்து லிஃப்ட் கதவு திறந்தது. ஆனால் அந்த நபர் வெளியேறும் முன் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக லிஃப்ட் வேகமாக சென்றது.
இதில் தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் அந்த நபர் நொடிப்பொழுதில் உயிர் தப்பினார். இல்லாவிட்டால் சுவருக்கும் லிஃப்டுக்கும் நடுவில் அந்த நபர் மாட்டிக்கொண்டு உயிர் போகும் அளவுக்கு நிலைமை மோசமாகிருக்கும் என பலரும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் அந்த நபர் இலேசான காயமடைந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை நீங்கள் லிஃப்டில் பயணிக்கும்போது மின்சாரம் தடை ஏற்பட்டு நின்றாலோ அல்லது லிஃப்ட் கதவு திறக்கப்படாமல் சிக்கிக்கொண்டாலோ முதலில் பதற்றமடைவதை நிறுத்த வேண்டும். அடுத்ததாக நீங்களாக மீட்பு படையினர் வரும் வரை தப்பிக்க முயற்சிக்க வேண்டாம் என அறிவுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் குடியிருப்பு, வணிக இடங்களில் பயன்படுத்தப்படும் லிஃப்ட்களை அடிக்கடி பராமரிப்பு செய்ய வேண்டுமென பலரும் தெரிவித்துள்ளனர்.