Watch Video: மகாராஷ்டிரா துலே மாவட்டத்தில் பாத்திரத்திற்குள் சிறுத்தையின் தலை சிக்கிக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாத்திரத்திற்குள் சிக்கிய சிறுத்தையின் தலை:
வனப்பகுதி, விவசாய நிலமாக மாற்றப்படுவதாலும் அங்கு சாலைகள் கட்டப்படுவதாலும் அங்கு போதுமான உணவு, தண்ணீர் கிடைக்காமல், வனவிலங்குகள் மனிதர்கள் வாழும் பகுதிக்கு செல்வது தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில், மகாராஷ்டிரா துலே மாவட்டத்தில் பாத்திரத்திற்குள் சிறுத்தையின் தலை சிக்கிக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
துலே மாவட்டத்தில் ஒரு கிராமத்திற்குள் இன்று சிறுத்தை ஒன்று புகுந்துள்ளது. கிராமத்திற்குள் சுற்றித் திரிந்த சிறுத்தை, ஒரு உலோக பாத்திரத்திற்குள் தனது தலையை விட்டிருக்கிறது. ஆனால், பாத்திரத்திற்கு இருந்து சிறுத்தையால் தனது தலையை வெளியே எடுக்க முடியவில்லை. நீண்ட நேரம் முயன்று பார்த்தும் சிறுத்தையால் தனது தலையை எடுக்க முடியவில்லை.
இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சிறுத்தையின் தலையை பாத்திரத்தில் இருந்து வெளியே எடுக்க முயற்சித்துள்ளனர். சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி, பாத்திரத்தை வெல்டிங் மிஷின் மூலம் உடைத்து சிறுத்தையை மீட்டனர்.
வைரல் வீடியோ:
சுமார் 5 மணி நேரமாக பாத்திரத்திற்குள் தலை சிக்கி சிறுத்தை அவதிப்பட்டு வந்த நிலையில், வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு, 12,852 சிறுத்தைகள் இருந்த நிலையில், 2022ஆம் ஆண்டு 8 சதவிகிதம் உயர்ந்து 13,874 சிறுத்தைகள் இருப்பதாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. அதிகபட்சமாக, மத்திய பிரதேசத்தில் 3,907 சிறுத்தைகள் உள்ளன.
அதற்கு அடுத்தப்படியாக, மகாராஷ்டிராவில் 1,985 சிறுத்தைகளும் கர்நாடகாவில் 1,879 சிறுத்தைகளும் உள்ளன. அதிக சிறுத்தைகள் இருக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு 4ஆவது இடத்தை பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் 1,070 சிறுத்தைகள் உள்ளன. உத்தரகாண்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 22 சதவிகிதம் குறைந்துள்ளது. அருணாச்சல பிரதேசம், அஸ்ஸாம், மேற்குவங்க ஆகிய 3 மாநிலங்களில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 349 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
PM Modi Chennai: "இந்தியாவின் வளர்ச்சியில் சென்னை மக்களுக்கு முக்கிய பங்கு" பிரதமர் மோடி புகழாரம்!