மடிக்கணினி, கணினி (பெர்சனல் கம்ப்யூட்டர்), டேப்லெட் ஆகியவற்றை இந்தியாவுக்கு இறக்குமதி செய்ய மத்திய அரசு நேற்று முன்தினம் கட்டுப்பாடு விதித்தது. கட்டுப்பாடுகள் உடனடியாக அமலுக்கு வருவதாக வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்திருந்தது.


மத்திய அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு:


அதன்படி, HSN 8741 விதியின் கீழ் வரும் மடிக்கணினிகள், டேப்லெட்டுகள், ஆல் இன் ஒன் பர்சனல் கம்ப்யூட்டர்கள் மற்றும் அல்ட்ரா ஸ்மால் ஃபார்ம் ஃபேக்டர் கம்ப்யூட்டர்கள் மற்றும் சர்வர்கள் ஆகியவற்றின் இறக்குமதி தடைசெய்யப்பட்டது. அதேநேரம், சரியான லைசென்ஸ் பெற்று இருந்தால் மட்டும், மேற்குறிப்பிடப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் எனவும் விளக்கமளிக்கப்பட்டது.


அதன்படி, உரிய அனுமதி பெற்று இருப்பவர்கள் ஒரு மடிக்கணினி, கணினி மற்றும் டேப்லெட்டை மட்டும் ஆன்லைன் தளங்கள் உள்ளிட்டவை மூலம் போஸ்டல் அல்லது கொரியர் மூலம் வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டது. மேலும், அவற்றிற்கு ஏற்கெனவே நடைமுறையில் உள்ள அனைத்து வரிகளும் பொருந்தும் எனவும் குறிப்பிடப்பட்டது.


அதோடு, R&D, சோதனை, தரப்படுத்தல், மதிப்பீடு, பழுதுபார்ப்பு, மறுஏற்றுமதி மற்றும் தயாரிப்பு மேம்பாட்டு நோக்கங்களுக்காக தடை செய்யப்பட்ட பொருட்களின் 20 எண்ணிக்கையை இறக்குமதி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட காரணங்களுக்காக மட்டுமே இந்த விலக்கு வழங்கப்படுவதாகவும், விற்பனைக்கு அனுமதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், அவற்றிற்கு ஏற்கெனவே நடைமுறையில் உள்ள அனைத்து வரிகளும் பொருந்தும் எனவும் கூறப்பட்டது. 


உள்நாட்டு மின்னணு சாதன உற்பத்தி நிறுவனங்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த தடை விதிக்கப்பட்டதாக மத்திய அரசின் சார்பாக தெரிவிக்கப்பட்டாலும், இந்த அறிவிப்பு, பெரு நிறுவனங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.  அறிவிப்பு வெளியான உடனேயே, துறைமுகங்களுக்கு சென்ற சுங்கத்துறை அதிகாரிகள், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட மின்னணு பொருட்களை இறக்குமதி செய்ய விடாமல் தடுத்து நிறுத்த தொடங்கினார். 


கட்டுப்பாடுகளை தற்காலிகமாக திரும்ப பெற்ற மத்திய அரசு:


இந்த நிலையில், இறக்குமதி தொடர்பாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நவம்பர் 1ஆம் தேதி வரை திரும்ப பெறுவதாக வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் அறிவித்துள்ளது. அதேபோல, புதிய விதிகளின் கீழ் இறக்குமதி செய்ய அனுமதி கோருபவர்கள் தேவையான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யும் பட்சத்தில், அவர்களில் பெரும்பாலானோருக்கு இறக்குமதி செய்வதற்கான அனுமதி உடனடியாக வழங்கப்படும் அரசு அதிகாரிகள் உறுதி அளித்தனர்.


இதுகுறித்து உயர்மட்ட அரசு அதிகாரிகள் இருவர் கூறுகையில், "ஏற்கனவே இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டு, வந்து கொண்டிருக்கும் பொருகளுக்கு உரிமம் வாங்க வைக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் இல்லை. ஆனால், இறக்குமதி தடை தொடர்பான அறிவிப்பு வெளியான உடனேயே புதிய விதியை செயல்படுத்த சுங்கத்துறை அதிகாரிகள் களத்தில் இறங்கினர். இந்த ஏற்றுமதிகளுக்கு ஒப்புதல் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது" என்றார்.