மகாராஷ்டிரா அருகே கிணற்றில் விழுந்த பூனை மற்றும் சிறுத்தையை, வனத்துறை அதிகாரிகள் போராடி மீட்டனர். நாஷிக் அருகே நடந்த  இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.


கிணற்றில் சிக்கிய சிறுத்தை, பூனை:


சின்னார் தாலுகா  ஆஷாபூர் கிராமத்தில் வயல்வெளி அருகே இருந்த கிணற்றுக்குள் இருந்த பூனை ஒன்று கத்துவதையும், ஏதோ ஒரு மிருகம் உறுமுவது போன்ற சத்தமும் கேட்டுள்ளது. இதனால் அருகே சென்று பார்த்த அப்பகுதி மக்கள், கிணற்றுக்குள் பூனை மற்றும் ஒரு சிறுத்தை சிக்கி இருப்பதை கண்டுள்ளனர். உடனடியாக கிணற்றுக்குள் இரண்டு விலங்குகள் சிக்கிக் கொண்டு இருப்பது குறித்து, வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். 






சீண்டிய பூனை..பம்மிய சிறுத்தை:


இதனிடையே, கிணற்றில் விழுந்த சிறுத்தை சுவற்றில் இருந்த கம்பி ஒன்றின் மீது ஏறி உயிர் பயத்தில் அமர்ந்து இருந்தது. அப்போது, கிணற்றில்  இருந்த பூனை அதன் அருகே வந்த போதும், எந்த ஒரு தாக்குதலையும் மேற்கொள்ளாமல் இருந்துள்ளது. சிறுத்தையின் பின்புறம் சென்ற பூனையோ அதன் மீது ஏறி குதித்து, கிணற்றில் இருந்து தப்பி வெளியேற முயன்றுள்ளது. ஆனால், அந்த முயற்சியும் தோல்வியிலேயே முடிந்துள்ளது. வழக்கமாக சக விலங்குகளை வேட்டையாடக்கூடிய சிறுத்தை, அந்த சிறுத்தை தன் மீது ஏறி குதித்து தப்பிக்க முயன்றும் கூட எந்த ஒரு சலனமும் இன்றி உயிர் பயத்தில் அந்த கம்பியின் மீது எந்தவொரு சலனமும் இன்றி அமர்ந்திருந்தது.


பூனை, சிறுத்தை மீட்பு:


தகவலறிந்த ஒரு மணி நேரத்திற்குள் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் கயிறு கட்டி, பலகை ஒன்றை  கிணற்றில் இறக்கி உள்ளே இருந்த பூனையை மீட்டனர். தொடர்ந்து, கூண்டு ஒன்றை இறக்கி சிறுத்தையை மீட்டனர்.


நடந்தது என்ன?


சம்பவம் தொடர்பாக பேசிய வனத்துறை அதிகாரிகள், “சுமார் இரண்டரை வயதிலான சிறுத்தை வேட்டையாடுவதற்காக அந்த பூனையை துரத்திச் சென்ற போது, சுற்றிலும் தடுப்புச்சுவர் இல்லாத கிணற்றில் இரண்டும் தவறி விழுந்திருக்க கூடும்.  இந்த சம்பவம் நள்ளிரவு அல்லது அதிகாலையில் நேர்ந்திருக்கலாம். காலையில் பண்ணைக்குச் சென்ற விவ்சாயிகள் பார்த்து எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். கிணற்றில் ஒரு குறுகிய மேடையில் சிறுத்தை அமர்ந்து உயிர் பிழைக்க, ​​பூனை சரியான இடத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் தவித்துள்ளது. தற்போது இரண்டுமே பத்திரமாக மீட்கப்பட்டுள்ளன. சிறுத்தை மொஹ்தாரி மாலேகான் வனப் பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டது. சில சோதனைகளுக்குப் பிறகு, சிறுத்தை காட்டுக்குள் விடப்படும்” என தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.