ஒரு குழந்தையின் உயிரை காப்பாற்ற ஒட்டுமொத்த கிராமமும் ஒருங்கிணைந்து போராடும் சம்பம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பைனல் மஸ்குலர் அட்ராபி :
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பலேரி கிராமத்தைச் சேர்ந்த கல்லுள்ளத்தில் நௌஃபல். துபாயில் வேலை செய்துக்கொண்டிருந்த இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனாவால் வேலை இழந்து வீடு திரும்பினார். அந்த சமயத்தில்தான் தனது ஒரே மகன் இவான், ஒன்றரை வயதாகியும் நடக்காமல் இருக்கிறாரே என கவலையில் ஆழ்ந்துள்ளார். மருத்துவரை அனுகிய போதுதான் சிறுவன் ஸ்பைனல் மஸ்குலர் அட்ராபி (SMA) நோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இந்த நோய் மரபணுவில் ஏற்படும் மாற்றத்தால் உண்டாகும் நரம்புத்தசைக் கோளாறு. இதனால் குழந்தையின் தசை பலவீனமாகும் இதனால் பேசுதல், நடப்பது, விழுங்குதல் மற்றும் சுவாசிப்பது உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுகிறது.இந்த நோய்க்கான சிகிச்சைக்கு 18 கோடி ரூபாய் செலவாகும். இதில், 9.5 கோடி ரூபாயை ஒரு வாரத்தில் செலுத்த வேண்டும், மீதமுள்ள தொகையை செலுத்த குடும்பத்திற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் அவகாசம் இருக்கிறது.
இணைந்த கிராமங்கள் :
ஏற்கனவே பொருளாதார பிரச்சினையை எதிர்க்கொண்டு வரும் நௌஃபலுக்கு இவ்வளவு பெரிய தொகை என்பது சவாலான விஷயம்தான் . இதனால் தனது சொந்த கிரமா மக்களிடன் உதவி கேட்டிருக்கிறார் நௌஃபல். நௌஃபல் தனது கிராமத்தின் உதவியை நாடியபோது, அவர்கள் உடனடியாக மருத்துவ நிதிக் குழுவை உருவாக்கி, நிதி திரட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கின்றனர். 15 துணைக் குழுக்கள் மூலம் கல்வி நிறுவனங்கள், மத நிறுவனங்கள், வீடுகள், கடைகள், சமூக ஊடகங்கள் உள்ளிட்ட பல இடங்களில் ஒட்டுமொத்த கிரமாமும் ஒரு குழந்தைக்காக நிதி திரட்டி வருகிறது. குட்டியாடி, கடியங்காடு பந்திரிக்கரை, பெரம்பிரா, நாதாபுரம், மேப்பையூர் உள்ளிட்ட அருகிலுள்ள நகரங்களைச் சேர்ந்த மக்கள் சாதி, வகுப்பு, மத, பாலின வேறுபாடுகள் இன்றி ஒன்றிணைந்து பல்வேறு வழிகளில் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற நிதி திரட்டினர். இதுவரை ஈவான் நிதிக் குழு 8.5 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. வரும் வாரத்தில் ரூ.1 கோடி வசூல் செய்தால் குழந்தை இவானின் சிகிச்சைக்கான முதற்கட்ட தொகையை செலுத்திவிடலாம் என பெற்றோர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ஆதரவு கரம் நீட்டும் தன்னார்வலர்கள் :
குழந்தையின் உயிரை காக்க சில இளைஞர்கள் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை நடத்தி அதன் மூலம் நிதி திரட்டியுள்ளனர். ஒரு குழந்தையின் உயிரை காக்க போராடும் தன்னார்வலர்களுக்கு , சில தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசாங்கம் இணைந்து உணவுகள் சமைத்து கொடுத்து வருகிறது.