கேரளாவில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம், ஒரு பெண்ணின் கையை சாதாரணமாக பிடிப்பது அல்லது தவறான நோக்கமின்றி பெண்ணை அணுகுவது அந்த பெண்ணின் மாண்பை மீறுவதாக இருக்காது என கூறி தீர்ப்பளித்துள்ளது.
இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 354-ன் கீழ், ஒரு பெண்ணின் கைகளைப் பிடித்து, எந்த தவறான நோக்கமும் இல்லாமல் அச்சுறுத்துவது பெண்ணின் நாகரீகத்தை சீர்குலைக்கும் குற்றமாகாது என்று கேரள நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது.
ஐபிசி பிரிவு 354-இன் கீழ் தாக்குதல் அல்லது குற்றவியல் நோக்கத்தில் இதை எடுக்க முடியாது என்று ஆலுவாவில் உள்ள நீதித்துறை முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்-II நீதிபதி சந்தோஷ் டி.கே. கூறியுள்ளார். மேலும் IPC பிரிவு 354-ன் கீழ் குற்றம் சாட்டப்பட்ட நபரை தண்டிக்க வேண்டும் என்றால், பெண்ணின் மாண்பை குலைக்கும் நோக்கில் குற்றச் செயல் புரிந்திருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
2013-ம் ஆண்டு நடந்த ஒரு சம்பவம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், பெண் ஒருவர் கோயிலுக்கு பூஜை செய்ய சென்றிருந்தபோது, குற்றம் சாட்டப்பட்டவர் அவரது கையைப் பிடித்து கொலை மிரட்டல் விடுத்தார் என குறிப்பிட்டார். அப்போது அந்த நபர் மீது வழக்கு தொடரப்பட்டது. அவர் ஐபிசியின் பிரிவுகள் 354 (தனது மாண்பை சீர்குலைக்கும் நோக்கத்துடன் பெண்ணை தாக்கியது) மற்றும் 506 (1) (குற்றவியல் மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையில், "குற்றம் சாட்டப்பட்டவர் ஏதேனும் அநாகரீகமான வார்த்தைகளை பேசியதாகவோ அல்லது பாதிக்கப்பட்டவரை தவறான நோக்கத்துடன் அணுகியதாகவோ எதுவும் பதிவு செய்யப்படவில்லை" என்று நீதிபதி குறிப்பிட்டார்.
எனவே, குற்றம் சாட்டப்பட்டவர் மீதான ஐபிசி பிரிவு 354 இன் கீழ் குற்றச்சாட்டை நீதிமன்றம் ரத்து செய்தது. இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவர் ஐபிசியின் பிரிவு 506 (1) இன் கீழ் கொலை மிரட்டல் விடுத்ததற்காக தண்டிக்கப்படுவார் என்றும் குறிப்பிட்டது. எனவே, குற்றம் சாட்டப்பட்டவருக்கு இரண்டு மாத கால சிறைத் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.