வழக்கமாக நாடாளுமன்றம் 3 முறை நடக்கும். பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்கால கூட்டத்தொடர் மற்றும் குளிர்கால கூட்டத்தொடர் என மூன்று பிரிவுகளாக நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு எப்போதும் இல்லாத வகையில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெறுகிறது.  18 ஆம் தேதி தொடங்கி நாளை வரை இந்த சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறுகிறது. சிறப்புக் கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் முக்கியமாக மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடுக்கான மசோதா  நேற்று முன்தினம் அமைச்சர் அர்ஜுன் ராம் மேஹ்வால் தாக்கல் செய்யப்பட்டது. மசோதா தாக்கல் செய்யப்பட்ட பின்னர் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் இயக்கத்தினர் என பலர் மத்திய அரசுக்கு பாராட்டைத் தெரிவித்தனர். இந்த மசோதா மீதான விவாதம் நேற்று மக்களவையில் தொடங்கியது.


இந்த விவாத்ததில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ”என் வாழ்க்கையில் இது ஒரு வருத்தமான தருணம். என் வாழ்க்கை துணை ராஜீவ்காந்தி, உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க அரசியல் சட்ட திருத்த மசோதாவை முதல்முறையாக கொண்டு வந்தார். அந்த மசோதா, மக்களவையில் நிறைவேறினாலும், மாநிலங்களவையில் 7 ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது. பின்னர், பிரதமர் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், அந்த மசோதா 2 அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இன்னும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக இந்த மசோதாவை அமலுக்கு கொண்டு வர வேண்டும்” என குறிப்பிட்டு பேசினார்.


தொடர்ந்து பேசிய காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி, மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு மசோதாவிற்கு காங்கிரஸ் முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக ராகுல் காந்தி பேசுகையில், மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற எதற்காக 8 ஆண்டுகள் எனவும், இன்றே இந்த மசோதா நிறைவேற்றப்படவேண்டும் எனவும் குறிப்பிட்டார். அதேபோல் நாட்டு மக்களுக்கு அதிகாரம் அளிப்பது என்பது அனைவருக்கும் அதிகாரம் அளிப்பதாக இருக்க வேண்டும் எனவும் அவர் பேசினார். 


விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "இந்த மசோதா நாட்டின் முக்கிய முடிவுகளை எடுப்பதிலும், கொள்கை வகுப்பதிலும் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்யும். இன்று உலகளவில் பெண் விமானிகள் 5 சதவீதமாக உள்ளனர். ஆனால், இந்தியாவில் 15 சதவீதமாகவும் உள்ளனர்.  பெண்கள், ஆண்களுக்கு சமம் என மசோதா மீதான விவாதத்தில் பேசிய பல பெண் எம்.பிக்கள் கூறினர். ஆனால், ஆண்களை விட பெண்கள் திறமைசாலிகள் என்று நான் கூறுவேன். பெண்களுக்கான பாதுகாப்பு, மரியாதை மற்றும் பங்கேற்பு, இந்த நாட்டின் பிரதமரான பிறகு மோடியால் வழங்கப்பட்டுள்ளது” என   குறிப்பிட்டுள்ளார்.  


பலரும் தங்களது கருத்துக்களை முன்வைத்த பின் இந்த மசோதா மீது  ஓட்டெடுப்பு நடந்தது. மசோதாவுக்கு ஆதரவாக 454 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓட்டு போட்டனர். 2 எம்.பி.க்கள் மட்டும் எதிராக வாக்களித்தனர். இதனால் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேறியது. புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நிறைவேற்றப்பட்ட முதல் மசோதா இதுவே ஆகும். இதனை தொடர்ந்து இன்று மாநிலங்களவையில் இந்த மசோதா மீது விவாதம் நடத்தப்படுகிறது.