பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல் 'மன் கி பாத்' (மனதின் குரல்) என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 11 மணிக்கு  இந்திய வாணொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். நேற்று 99வது மன் கி பாத் நிகழ்ச்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.


அப்போது அவர் பேசியதாவது,


இப்போது சில இடங்களில், கொரோனா அதிகரித்து வருகிறது.  ஆகையால் நீங்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையோடு நடந்து கொள்ள வேண்டும், தூய்மை பற்றி கவனத்தில் கொள்ள வேண்டும்.  


காசி தமிழ்ச் சங்கமத்திலே, காசி மற்றும் தமிழ்நாட்டிற்கும் இடையே, பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் வரலாற்று மற்றும் கலாச்சாரத் தொடர்புகள் கொண்டாடப்பட்டன.  ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வு நமது தேசத்திற்கு பலத்தை அளிக்கிறது.   நாம் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் அறிந்து கொள்ளும் போது, கற்கும் போது, ஒற்றுமை உணர்வு மேலும் ஆழமாகப் பாய்கிறது.  ஒற்றுமையின் இந்த உணர்வோடு கூடவே, அடுத்த மாதம் குஜராத்தின் பல்வேறு பாகங்களிலும் சௌராஷ்ட்ர தமிழ்ச் சங்கமம் நடைபெற இருக்கிறது. 


இப்போதெல்லாம் உலகம் முழுவதிலும் தூய்மையான எரிசக்தி, புதுப்பிக்கவல்ல எரிசக்தி பற்றி நிறைய பேசப்படுகின்றன.  உலக மக்களை நான் சந்திக்கும் போது, இந்தத் துறையில் பாரதத்தின் சாதனைபடைக்கும் வெற்றியைப் பற்றிக் கண்டிப்பாக முன்வைக்கிறேன்.  குறிப்பாக, பாரதம், சூரியசக்தித் துறையில் எந்த வகையில் விரைவாக முன்னேறி வருகிறது என்பதே கூட ஒரு மிகப் பெரிய சாதனையாகும். 


பாரதத்தின் வல்லமை, புதிய முறையில் சீறிப்பாய்ந்து வந்து கொண்டிருக்கிறது, இதிலே பெரிய பங்களிப்பு என்றால், நமது பெண்சக்தியுடையது.  இன்றைய நிலையில், இப்படி பல எடுத்துக்காட்டுக்கள் வெளிப்பட்டிருக்கின்றன.  நீங்கள் சமூக ஊடகங்களில், ஆசியாவின் முதல் பெண் லோகோ பைலட் சுரேகா யாதவ் அவர்களைக் கண்டிப்பாகப் பார்த்திருக்கலாம்.  சுரேகா அவர்கள், ஒரு சாகஸ வீராங்கனை என்ற வகையில்         மேலும் ஒரு சாதனையைப் புரிந்திருக்கிறார் – வந்தே பாரத் விரைவு ரயிலின் முதல் பெண் லோகோ பைலட்டாக அவர் ஆகி இருக்கிறார்.  இந்த மாதம் தான், தயாரிப்பாளர் குனீத் மோங்காவும் இயக்குநர் கார்த்திகீ கோன்ஸால்வேஸ் ஆகியோரின் ஆவணப்படமான ‘Elephant Whisperers’ ஆஸ்கார் விருதினை வென்று, இவர்கள் தேசத்திற்குப் பெருமை சேர்த்திருக்கிறார்கள்.  


நாகாலாந்திலே நிகழ்ந்திருக்கிறது.  நாகாலாந்திலே, 75 ஆண்டுகளில் முதன்முறையாக, இரண்டு பெண் உறுப்பினர்கள் சட்டப்பேரவைத் தேர்தல்களிலே ஜெயித்து மன்றத்தில் நுழைந்திருக்கிறர்கள்.  இவர்களில் ஒருவரை நாகாலாந்து அரசு அமைச்சராகவும் ஆக்கியிருக்கிறது, அதாவது, மாநிலத்தின் மக்களுக்கு முதன்முறையாக ஒரு பெண் அமைச்சர் கிடைத்திருக்கிறார்.


நவீன மருத்துவ அறிவியலின் இந்தக் காலத்திலே, உறுப்பு தானம் என்பது யாரோ ஒருவருக்கு உயிர் அளிக்கக்கூடிய மிகப்பெரிய வழியாக ஆகியிருக்கிறது.  ஒரு நபர் இறந்த பிறகு தனது உடலை தானமளித்தால், அவரால் 8 முதல் 9 நபர்களுக்கு, புதிய ஒரு வாழ்க்கை கிடைப்பதற்கான சாத்தியக்கூறு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.  நிறைவை அளிக்கும் விஷயம் என்னவென்றால், இன்று தேசத்திலே உறுப்பு தானத்தின்பால் விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது என்பது தான்.
 
மனதின் குரலின் நூறாவது பகுதி குறித்து நாட்டுமக்களின் மத்தியில் பெரும் உற்சாகம் இருப்பது எனக்கும் மகிழ்ச்சியை அளிக்கிறது.  ஏராளமான செய்திகள் எனக்கு வருகின்றன, தொலைபேசி அழைப்புகள் வருகின்றன.  இன்று நாம் சுதந்திரத்தின் அமுதகாலத்தைக் கொண்டாடி வரும் வேளையில், புதிய உறுதிப்பாடுகளோடு முன்னேறி வரும் வேளையில், 100ஆவது மனதின் குரலின் பகுதி தொடர்பாக, உங்களுடைய கருத்துக்கள், ஆலோசனைகள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன், தவிப்போடு காத்திருக்கிறேன்.  காத்திருப்பு என்பது என்னவோ எப்போதும் இருந்தாலும் கூட, இந்த முறை காத்திருப்பு சற்று அதிகமாகவே இருக்கிறது.  உங்களுடைய கருத்துக்களும், ஆலோசனைகளும் தான் ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி ஒலிபரப்பாகவிருக்கும் 100ஆவது பகுதி மனதின் குரலை நினைவில் கொள்ளத்தக்க விசேஷமானதாக ஆக்கக்கூடியது.