கேரளாவின் சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் லிபின் ஆண்டனி. 30 வயதான இவர் ஏற்கனவே கஞ்சா பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர். சமீபத்தில் சிறையில் இருந்து விடுதலையான அவரிடம் மீண்டும் கஞ்சா இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கலால் துறையினர் அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


பின்னர், அவரிடம் இந்த கஞ்சா எப்படி கிடைத்தது? என்று விசாரணை நடத்தியதில் பேபி அகஸ்டின் என்பவரிடம் இருந்து கிடைத்ததாக தகவல் தெரிவித்துள்ளார். சேரநல்லூர் அருகே உள்ள எடயங்குளம் பகுதியை பூர்வீகமாக கொண்டவர் பேபி அகஸ்டின் என்கிற பேபிகுஞ்சு என்றும், அவர் மலையாள திரையுலகில் ஜூனியர் ஆர்டிஸ்ட் நடிகராக நடித்து வருவதையும் கண்டுபிடித்துள்ளனர்.




இதையடுத்து, எடப்பள்ளியில் உள்ள பேபி அகஸ்டின் தங்கியுள்ள வாடகை வீட்டிற்கு அதிகாரிகள் மற்றும் போலீசார் சென்றுள்ளனர். அங்கு சென்ற அதிகாரிகளும், காவல்துறையினரும் அந்த வீடு முழுவதும் கஞ்சா இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அந்த வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 94 கிலோ கஞ்சாவை போலீசாரும், அதிகாரிகளும் பறிமுதல் செய்தனர்.


வடக்கு பராவூர் கலால் அதிகாரி நிஜூமோன் கூறும்போது, புத்தாண்டு தினத்தை முன்னிட்டு விற்பனை செய்வதற்காக இந்த கஞ்சா பதுக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கிறோம். லிபின் கைது செய்யப்பட்டதை அறிந்த பேபி அகஸ்டின் தலைமறைவாகிவிட்டார்.




மேலும், இந்த கஞ்சா முழுவதும் ஆந்திராவில் இருந்து தமிழ்நாடு வழியாக காய்கறி வாகனங்கள் மூலமாக கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்றும் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். மேலும், பேபி அகஸ்டின் ஏற்கனவே சில குற்றச்செயல்களில் ஈடுபட்டிருக்கிறார். சில மலையாள படங்களில் சிறு, சிறு வேடங்களில் நடித்துள்ளார். அவருக்கு இவ்வளவு கஞ்சா எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் தகவல்கள் தெரிவித்தனர்.  கைது செய்யப்பட்ட லிபினை நீதிமன்ற காவலில் வைக்க போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண