இளைஞர்கள் ரொம்ப மோசம்.. 98.8% பேர் பூஸ்டர் தடுப்பூசி போடவில்லை.. வெளியான ரிப்போர்ட்!
கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ள தகுதியுடைய 92% பேர் இதுவரை போட்டுக்கொள்ளவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ள தகுதியுடைய 92% பேர் இதுவரை போட்டுக்கொள்ளவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
வேகமெடுக்கும் கொரோனா பரவல்:
இந்தியாவில் கொரோனாத் தொற்று பரவல் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 20,138 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை நேற்றைய தினத்தை விட 3,619 அதிகம் ஆகும். கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 36 லட்சத்து 89 ஆயிரத்து 989 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 5,25,557 ஆக உயர்ந்துள்ளது. 1,36,076 பேர் சிகிச்சையில் இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

98.8% இளைஞர்கள் தடுப்பூசி போடவில்லை:
இந்த நிலையில், கொரோனா தடுப்பூசிகள் முதல் இரண்டு டோஸ்களை போட்டுக்கொண்ட இந்திய மக்களில் 92% பேர் தகுதி இருந்தும் பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ளவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 59.4 கோடி பேர் பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ளவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. 18 முதல் 45 வயது வரையிலானவர்களில் 98.8% பேரும், 45-60 வயது வரையிலானவர்களில் 98 சதவீதம் பேரும், 60 வயதைத் தாண்டியவர்களில் 73 சதவீதம் பேரும் கொரோனா பூஸ்டர் தடுப்பூசிப் போட்டுக்கொள்ளவில்லை. பூஸ்டர் டோஸ்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தான் தற்போது இலவசமாகப் போடப்படுகிறது.
எனினும் சில மாநிலங்களில் இளைஞர்களுக்கு நிறுவனங்களும், என்ஜிஓக்களும் ஸ்பான்சர் செய்கின்றனர். மூன்றாவது டோஸுக்கு கட்டணம் செலுத்த வேண்டி இருக்கிறது என்பது தான் இந்த தாமதத்திற்கு காரணம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மாநிலங்களிடம் தற்போது இருக்கும் 10 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்களை உபயோகப்படுத்த ஆரம்பித்தால், தற்போது செல்லும் நிலவரப்படி இதனை முழுமையாக முடிக்க 2,530 நாள்களாகும் என்று கூறப்படுகிறது.
75 நாள்களுக்கு தடுப்பூசி முகாம்:
இந்நிலையில், இந்தியா சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டை நிறைவு செய்யும் நிலையில் அதனை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை ஜூலை 15ம் தேதி முதல் 75 நாள்களுக்கு இளைஞர்களுக்கு வழங்க மத்திய சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. ‘ஆஸாதி கா அம்ரித் மஹோத்சவ்’ கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ள 77 கோடி பேரில், 18 வயது முதல் 45 வயது வரையிலானவர்களில் 1 சதவீதம் பேர் மட்டுமே பயன்படுத்தியுள்ள நிலையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.