திருட்டுப் பட்டம் கட்டிய பெண் காவல் அதிகாரி நஷ்ட ஈடாக ரூ.50 லட்சம் கோரியுள்ளார். கேரள உயர் நீதிமன்றத்தில் அச்சிறுமி இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார். தானும், தனது தந்தையும் சேர்ந்து செல்போனை திருடிவிட்டதாக பெண் காவல் அதிகாரி ஒருவர் பொது இடத்தில் வைத்துத் தங்களை அவமானப்படுத்தியதற்காக அந்த நஷ்ட ஈடை வழங்க வேண்டும் என்று அந்தச் சிறுமி கோரியுள்ளார்.


அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் அந்தச் சம்பவம் எனக்கு மிகுந்த மன உளைச்சலை அளித்தது என்பதால், நான் பலமுறை மனநல ஆலோசனைக்குச் சென்றேன். இருந்தும் கூட மக்கள் கூடியிருந்த பொது இடத்தில் அவமானப்படுத்தப்பட்ட சம்பவம். அதுவும் திருட்டுப் பட்டம் கட்டியதை மறக்க முடியவில்லை என்று அச்சிறுமி கூறியுள்ளார்.


நடந்தது என்ன?


கடந்த ஆகஸ்ட் மாதம், 27 ஆம் தேதியன்று, அட்டிங்கால் அருகே இஸ்ரோ மையத்துக்கு உதிரிபாகங்களை எடுத்துச் செல்லும் ராட்சத வாகனம் வந்தது. அதை வேடிக்கைப் பார்க்க அப்பகுதி மக்கள் எல்லோரும் கூடியிருந்துள்ளனர்.
அதேபோல், ஜெயச்சந்திரனும் (38) அவரது 8 வயது மகளும் அங்கே வேடிக்கைப் பார்க்கச் சென்றுள்ளனர். அப்போது அங்கே காவல் பணியில் இருந்த ரெஜிதா, திடீரென தனது மொபைல் போனை காணவில்லை என்று கூறியுள்ளார். அப்போது அவர், அருகிலிருந்து ஜெயந்திரனையும் அவரது 8 வயது மகளையும் சந்தேகப்பட்டு பேசியுள்ளார். ஜெயச்சந்திரன் போனை எடுத்து மகளிடம் கொடுத்து ஒழித்துவைத்ததாகக் கூறினார். ஆனால், ஜெயச்சந்திரனும் அவரது மகளும் திருடவில்லை என மன்றாடினர். ஆனால் அந்த காவல் அதிகாரியோ தொடர்ந்து அவதூறாகப் பேசி இருவரையும் அவமானப்படுத்தினர். பின்னர் ஒருக்கட்டத்தில் அவருடைய செல்போன் அவருடைய போலீஸ் வாகனத்திலேயே இருப்பதை உணர்ந்தார். ஆனால் அதன்பின்னர் ஒரு சிறு மன்னிப்பு கூட கோராமல் அவர் அங்கிருந்து சென்றார்.


நடந்த சம்பவத்தை கூட்டத்தின் இருந்த ஒருவர் தனது கைப்பேசியில் வீடியோ எடுத்தார். அந்த ஆவணத்தை சாட்சியாக வைத்தே இப்போது சிறுமி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


இதனையடுத்து, ஜெயச்சந்திரன் காவல்துறை தலைவர் அனில் காந்தை சந்தித்து, ரெஜிதா மிது நடவடிக்கை எடுக்கக் கோரினார். அனில் காந்த் தென் மண்டல ஐஜி ஹர்ஷிதா அட்டலூரிக்கு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். விசாரணைக்குப் பின்னர் ரெஜிதாவை பணியிட மாற்றம் செய்து ஐஜி உத்தரவிட்டார். ஆனால் அந்த பணியிட மாற்றம் ரெஜிதாவுக்கு தண்டனையாக இல்லை மாறாக அவர் நீண்ட காலமாக மாற விரும்பிய இடமாகவே அமைந்தது. 


இதனால், மனமுடைந்த ஜெயச்சந்திரன் குடும்பம் கடந்த செப்டம்பர் மாதம் கேரள தலைமைச் செயலகம் முன் அமர்ந்து தர்ணா செய்தது. அதுவும் கண்டு கொள்ளப்படாத சூழலில், ஜெயச்சந்திரன் குடும்பம் தற்போது நீதிமன்றத்தை நாடியுள்ளது.