இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை பரப்பியதாகவும் பொய்யான தகவல்களை வெளியிட்டதாகவும் கூறி, 7 யூடியூப் சேனல்களையும் 1 பாகிஸ்தான் யூடியூப் சேனலையும் மத்திய அரசின் கோரிக்கையை அடுத்து யூடியூப் நிறுவனம் முடக்கி உள்ளது. இதன் மூலம், கடந்த டிசம்பர் மாதம் முதல், முடக்கப்பட்ட யூடியூப் சேனல்களின் எண்ணிக்கை 102ஆக உயர்ந்துள்ளது.


 






இந்த சமீபத்திய நடவடிக்கையில் தகவல் மற்றும் தொழில்நுட்ப விதிகள் 2021 இன் கீழ் அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி, பேஸ்புக் கணக்கு ஒன்று முடக்கப்பட்டுள்ளதாக தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து அமைச்சகம் விவரிக்கையில், "இந்தியாவில் உள்ள மத பிரிவினருக்கிடையே தவறான தகவல்களை வெளியிட்டு வெறுப்பை பரப்பியுள்ளது. ஏறக்குறைய 86 லட்சம் சந்தாதாரர்கள் மற்றும் 114 கோடி பார்வைகளை உடைய எட்டு யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளது.


மதக் கட்டமைப்புகளை இடித்துத் தள்ள இந்திய அரசு உத்தரவிட்டதாகவும் மதப் பண்டிகைகளைக் கொண்டாடத் தடை விதித்ததாகவும் இந்தியாவில் மதப் போரைப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாகவும் போலிச் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. 


போலி மற்றும் பரபரப்பான முகப்பு படங்கள், செய்தி வாசிப்பாளர்களின் படங்கள் மற்றும் சில தொலைக்காட்சி செய்தி சேனல்களின் லோகோக்களை பார்வையாளர்களை தவறாக வழிநடத்த பயன்படுத்தியுள்ளனர். ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் குறித்தும் தவறான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.  


முடக்கப்பட்ட இந்திய யூடியூப் சேனல்களில், ‘சப் குச் தேகோ’ அதிக சந்தாதாரர்களைப் பெற்றுள்ளது. 19.4 லட்சம் மற்றும் கிட்டத்தட்ட 33 கோடி பார்வைகளை கொண்டுள்ளது. முடக்கப்பட்ட மற்ற சேனல்களில் லோக்தந்த்ரா டிவியும் அடங்கும். அதன் பேஸ்புக் கணக்கும் தடைசெய்யப்பட்டுள்ளது. தவிர U&V TV, AM ரஸ்வி, கவுரவ்ஷாலி பவன் மிதிலாஞ்சல், SeeTop5TH மற்றும் Sarkari Update ஆகிய சேனல்களும் முடக்கப்பட்டுள்ளன.


பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ‘நியூஸ் கி துன்யா’என்ற சேனலும் முடக்கப்பட்டுள்ளது. இதற்கு சுமார் 1 லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர். ஏப்ரலில், 22 யூடியூப் சேனல்கள் இதே போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் முடக்கப்பட்டுள்ளன. அவற்றில் நான்கு பாகிஸ்தானைச் சேர்ந்த சேனகள் ஆகும். மீதமுள்ளவை, இந்தியாவில் இருந்து இயக்கப்படுகின்றன.