Jaipur Fire Accident: ஜெய்பூர் அரசு மருத்துவமனையில் பணியாளர்களின் கவனக்க்றைவு காரணமாகவே, உயிர்பலி ஏற்பட்டதாக பாதிக்கப்பட்டோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
அரசு மருத்துவமனையில் தீ விபத்து - 8 பேர் பலி
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள அரசு சவாய் மான் சிங் (எஸ்எம்எஸ்) மருத்துவமனையின், அதிர்ச்சி (Trauma) மையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த 8 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேமிப்புக் கிடங்கில் மின் இணைப்பில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் தீ விபத்தின் போது, நீரோ ஐசியு பிரிவில் 11 பேர் சிகிச்சை பெற்று வந்ததாகவும், அதில் 3 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் 2 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் என 6 பேர் உயிரிழந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மேலும் 2 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்திற்கான காரணம்
தீ பற்ற தொடங்கியதுமே அதிவேகமாக பரவ தொடங்கி அந்த தளம் முழுவதும் கரும்புகை சூழ தொடங்கியுள்ளது. இதனால் குழப்பம் ஏற்பட்டு, நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடையே குழப்பமும் அச்சமும் தொற்றிகொண்டது. மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தவர்களை உடனடியாக மருத்துவமனை கட்டிடத்தில் இருந்தே வெளியேற்றியுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் 2 மணி நேரம் கடுமையாக போராடி, தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
முதலமைச்சர் ஆய்வு:
இதனிடையே, சம்பவ இடத்திற்கு நேரில் வந்து முதலமைச்சர் பஜன்லால் சர்மா, நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஜோகராம் படேல், உள்துறை இணையமைச்சர் ஜவஹர் சிங் பெதம் ஆகியோர் ஆய்வு செய்தனர். முன்னதாக படேலும், பெதாமும் வந்தபோது அவர்களை முற்றுகையிட்ட இரண்டு நோயாளிகளின் குடும்பத்தினர், “தீ விபத்து நடந்த நேரத்தில் ஊழியர்கள் சம்பவ இடத்தை விட்டு ஓடிவிட்டதாகவும், தங்கள் குடும்பத்தினர் பற்றிய தகவல்களை வழங்கத் தவறிவிட்டதாகவும் குற்றம் சாட்டி” வாக்குவாதத்தில் ஈடுபட்டு மனமுடைந்து அழுதனர்.
ஊழியர்கள் மீது குற்றசாட்டு
தீ விபத்து தொடர்பாக பேசிய மருத்துவமனையில் இருந்த ஒருவர், “ஆரம்பத்தில் லேசாக புகை பரவியபோதே கவனித்து, அதனை மருத்துவமனை ஊழியர்களிடம் தெரிவித்தோம். ஆனால், அதனை அவர்கள் பொருட்படுத்தவே இல்லை. தீ வேகமாக பரவ தொடங்கியதுமே, முதலில் அங்கிருந்து தப்பித்து ஓடியவர்களே அவர்கள் தான். தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட எனது உறவினரை பற்றி எனக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவரின் நிலை என்ன என்பது எனக்கு தெரியவில்லை, யாரை கேட்டாலும் எந்த தகவலும் சொல்ல மறுக்கிறார்கள்” என குற்றம்சாட்டியுள்ளார். அதேநேரம், மருத்துவமனையில் வார்ட் பாய் ஒருவர் பேசுகையில், “சம்பவம் நடந்தபோது அறுவை சிகிச்சை அறைக்குள் இருந்தோம். தீ விபத்து தொடர்பான சத்தம் கேட்டதுமே, உடனடியாக விரைந்து சென்று 3 முதல் 4 பேரை அங்கிருந்து மீட்டோம். அதற்கு அதிவேகமாக பரவ தொடங்கியதால், அதற்கு மேல் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை” என விளக்கமளித்துள்ளார்.