கேரளாவை சேர்ந்த இளைஞர் 5 நாடுகள் வழியாக 370 நாட்கள் நடந்தே சென்று, தனது ஹஜ் பயணத்தை பூர்த்தி செய்துள்ளார்.


வியப்பை ஏற்படுத்திய ஹஜ் பயணம்:


இஸ்லாமியராக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஒருமுறையாவது, ஹஜ் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கை உள்ளது. அந்த மரபை கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் அனைவரும் வியக்கும் வகையில் வித்தியாசமான முறையில் பூர்த்தி செய்துள்ளார். யூடியூபரான ஷிஹாப் சோத்தூர் எனும் இளைஞர் தனது சொந்த ஊரிலிருந்து 5 நாடுகள் வழியாக நடந்தே சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவிற்கு சென்றுள்ளார்.


370 நாட்கள் பயணம்:


மலப்புரம் மாவட்டத்தில் உள்ள வளன்செர்ரி பகுதியில் இருந்து கடந்த ஆண்டு ஜுன் மாதம் 2ம் தேதி, நடைபயணமாக சவுதி அரேபியாவை நோக்கிய தனது ஹஜ் பயணத்தை  ஷிஹாப் சோத்தூர் தொடங்கினார்.  தொடர்ந்து பாகிஸ்தான், ஈரான், ஈராக் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் வழியாக சவுதி அரேபியாவை சென்றடைந்தார். மே மாதம் இரண்டாவது வாரத்தில் குவைத்தில் இருந்து சவுதி அரேபிய எல்லைக்குள் ஷிஹாப் சோத்தூர் நுழைந்தார். 


அந்த 21 நாட்கள்:


சவுதி அரேபியாவிற்குள் நுழைந்ததும் ஷிஹாப், இஸ்லாமியாமியர்களின் முக்கியமான வழிபாட்டு தலமான மெதினாவை சென்றடைந்தார். அங்கிருந்து மெக்காவிற்கு புறப்படுவதற்கு முன்பாக 21 நாட்கள் மெதினாவில் இருந்துள்ளார். தொடர்ந்து வெறும் 9 நாட்களில் 440 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து, மெக்காவை சென்றடைந்தார். இதையடுத்து  கேரளாவிலிருந்து அவர் தாய் வந்த உடன், மெக்காவில் வழிபாடு நடத்த உள்ளார். இந்த பயணத்திற்காக மொத்தமாக எட்டாயிரத்து 600 கிலோ மீட்டர் தூரத்தை 370 நாட்களில் அவர் நடந்தே கடந்துள்ளார். இதனிடையே சவுதி அரேபியாவில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வழிநெடுகிலும் அவர் பலரை சந்தித்து தொடர்பான புகைப்படங்களையும் தனது  டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 


வாகா எல்லையில் சந்தித்த பிரச்னை:


யூடியூபரான ஷிஹாப் கேரளாவில் இருந்து பல மாநிலங்களை கடந்து பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைவதற்கான வாகா எல்லையை சென்றடைந்தார். ஆனால், அவரிடம் போக்குவரத்து விசா இல்லாததால் அந்த பகுதியில் இருந்த பள்ளி ஒன்றில் மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்தது. பின்பு ஒரு வழியாக கடந்த பிப்ரவரி மாதம் அவருக்கான போக்குவரத்து விசா கிடைத்தது. பின்பு தனது பயணத்தை தொடங்கியவர் 4 மாதங்களுக்குப் பிறகு   சவுதி அரேபியாவை சென்றடைந்துள்ளார். இந்த பயணம் தொடர்பான அனைத்து விவரங்களையும், அனுபவங்களையும் ஷிஹாப் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதேநேரம், பாகிஸ்தானில் சில மாதங்கள் காத்திருக்காமல் இருந்திருந்தால், இன்னும் குறைவான நாட்களிலேயே மெக்காவை சென்றடைந்திருக்கக் கூடும். தற்போது வெற்றிகரமாக தனது பயணத்தை முடித்த ஷிஹாப் சோத்தூருக்கு தற்போது பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.