இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, பொருளாதரத்தின் நிலை மிக மோசமான நிலையில் இருந்தது. வறுமையும், எழுத்தறிவு விகிதமும் குறைவாக இருந்தது. அப்போது, இந்தியா மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்தது. மேலும் சுதந்திரத்திற்கு பிறகு, இந்திய தலைவர்களுக்கு மிகப் பெரிய சவால் காத்திருந்தது. ஆனால் நம் நாட்டு தலைவர்களின் பல்வேறு நடவடிக்கைகளால் இந்தியாவின் பொருளாதார நிலை வளர்ச்சியை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. அதில் சில நடவடிக்கைகள் குறித்து தெரிந்து கொள்வோம்.


ஐந்தாண்டு திட்டம்:


இந்தியாவில் விரைவான பொருளாதாரத்தை அடைய ஐந்தாண்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இத்திட்டமானது, சோவியத் நாட்டில் இருந்து முறையை பின்பற்றி செயலபடுத்தப்பட்டது. இத்திட்டங்களை நிறைவேற்ற 1950-ஆம் ஆண்டு இந்திய திட்ட குழு அமைக்கப்பட்டது. ஐந்தாண்டு திட்டங்களின் மூலம் நாட்டின் வருமானம் அதிகரித்தது.


மக்களிடையே வருமானம் மற்றும் செல்வ பகிர்வில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் குறைக்கப்பட்டன. நாட்டிலுள்ள வறுமை குறைக்கப்பட்டது. வேளாண் மற்றும் தொழில் துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு உற்பத்தி பெருக்கப்பட்டது. உற்பத்தி துறை பெருகியதையடுத்து, நாட்டின் வேலைவாய்ப்பும் அதிகரித்தது.


பசுமை புரட்சி:


இந்தியாவில் 1967 ஆம் ஆண்டு, பசுமைப் புரட்சி திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்  மூலம் நிலச்சீர்திருத்தம், அதிக விளைச்சல் தரும் விதைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பாசன வசதிகள்  மூலம் விளைச்சல் அதிகரிக்கப்பட்டது. பசுமை புரட்சியின் தாக்கத்தால், இந்தியாவில் உணவு உற்பத்தி அதிகரித்தது.




இதனால், இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவை அடைந்தது. இந்த செயல்முறைக்காக இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனமும், இந்திய வேளாண் பல்கலைக்கழகங்களான லூதியானா, பந்த் நகர்  மற்றும் கோயம்புத்தூர் மிகவும் உறுதுணையாக இருந்தது.


வங்கிகள் தேசியமயமாக்கல்:




இந்திய அரசாங்கம் 1969 ஆம் ஆண்டு 14 வங்கிகளையும், 1980 ஆம் ஆண்டு 6 வங்கிகளையும் நாட்டுடைமையாக்கியது. இதையடுத்து, தனியார் வசம் இருந்த வங்கிகள், அரசு கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. இந்த நடவடிக்கையால் கிராமப்புற மக்களுக்கு கடன் வழங்குவது அதிகரித்தது. விவசாயத்துறைக்கு கடன் வழங்குவது அதிகரித்தது. அந்த காலத்தில் 50 விழுக்காடுகளுக்கு மேல் வறுமை நீடித்திருந்தது. இந்த நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் மேன்மையடைய ஆரம்பித்தது.


பொருளாதார சீர்திருத்தங்கள் 1991:


இந்தியாவில் 1991 ஆம் ஆண்டு மிகப்பெரிய பொருளாதார சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.  1991 பொருளாதார கொள்கையின் நோக்கங்களை அடைய பல்வேறு நடைமுறைகள் கொண்டுவரப்பட்டன. தொழில்மயமாதலை ஊக்கப்படுத்த, தொழில் உரிமம் வழங்கும் முறை ரத்து செய்யப்பட்டது. அயல்நாட்டு முதலீட்டை வரவேற்றல் மற்றும் பொதுத்துறை மற்றும் தனியார் துறை சார்ந்த ஒருங்கிணைந்த செயல்பாடு போன்ற நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது.




பொருளாதார சீர்திருத்தம் காரணமாக, அயல்நாட்டு முதலீடுகள் பன்மடங்கு அதிகரித்தது. பன்னாட்டு நிறுவனங்களான நோக்கியா, ஃபோர்டு, எல் அண்டு டி போன்ற நிறுவனங்கள், இந்தியாவில் நிறுவனங்களை தொடங்குவதன் மூலமாக, முதலீடுகளை மேற்கொண்டன.


சீர்திருத்தத்தின் முக்கிய அம்சங்கள்:



  1. தாராளமயமாக்கல்:  தனியார் துறை நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இக்கொள்கையின் மூலமாக பொதுத்துறை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்ட துறைகளில், தனியார் துறையும் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.



  1. தனியார்மயமாக்கல்: பொதுத்துறை நிறுவனங்களை, தனியார் மயமாக்கும் நடைமுறைக்கும் அனுமதி வழங்கப்பட்டது.



  1. உலகமயமாக்கல்: ஒரு நாட்டின் வர்த்தகத்தை, உலகத்திலுள்ள பிற நாட்டோடு தொடர்பு படுத்துவதே உலகமயமாக்கல். இந்த நடவடிக்கையின் மூலம் பிற நாட்டு பொருட்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டது. இதன் மூலம் மற்ற நாடுகளின் பொருட்கள், உள்நாட்டில் பயன்படுத்தப்படுவது அதிகரித்தது.


இதுபோன்ற நடவடிக்கைகளால், பொருளாதாரம் வளர்ச்சி பாதயை நோக்கி நகர ஆரம்பித்தது. ஆனால் மேலும் வளர்ச்சி அடைய வேண்டிய தேவை இன்னும் இருக்கிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண