ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில் சனிக்கிழமையன்று சுமார் 50 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து பாலத்தில் இருந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.


 






விபத்து குறித்து பேசிய காவல் கண்காணிப்பாளர் மனோஜ் ரத்தன், "கிரிதிஹ் மாவட்டத்தில் இருந்து ராஞ்சி நோக்கிச் சென்ற பேருந்து, தடிஜாரியா காவல் நிலையப் பகுதியில் உள்ள சிவன்னே ஆற்றில் பாலத்தின் சுவரை இடித்ததில் அது உடைந்தது. பின்னர், பேருந்து கீழே விழுந்ததில் விபத்து ஏற்பட்டது. இன்னும் சில பயணிகள் பேருந்தில் சிக்கியிருப்பதால் மீட்பு பணி நடைபெற்று வருகிறது.


இரண்டு பயணிகள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் நான்கு பேர் இறந்துவிட்டதாக ஹசாரிபாக்கில் உள்ள சதர் மருத்துவமனையில் மருத்துவர்கள் அறிவித்தனர். சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும். அவர்களை சிறந்த சிகிச்சைக்காக ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் (RIMS)க்கு அனுப்ப தயாராகி வருகிறோம்.


ஆற்றின் நடுவே தண்ணீரில் பேருந்து விழுந்திருந்தால் சேதம் அதிகமாக இருந்திருக்கும். சில பயணிகள் இன்னும் பேருந்தில் சிக்கியுள்ளனர். மேலும், எரிவாயு கட்டர்களின் உதவியுடன் அவர்கள் வெளியேறும் இடத்தை உருவாக்கி அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். மீட்பு பணியை கண்காணிக்க டிஎஸ்பி அந்தஸ்தில் ஒரு அலுவலர் மற்றும் மூன்று காவல் நிலைய பொறுப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்" என்றார்.


விபத்தில் இறந்தவர்களுக்கு இறங்கல் தெரிவித்த ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், "ததிஜாரியாவில் பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்ததில் பயணிகள் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது. இறந்தவர்களின் ஆன்மாக்களுக்கு இறைவன் சாந்தி அடைய செய்யட்டும். துயரத்தை தாங்கும் சக்தியை குடும்பத்தாருக்கு வழங்குவானாக.


மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.