ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் காருக்குள் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டேராடூனைச் சேர்ந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் திங்கள்கிழமை பஞ்ச்குலாவில் ஒரு காருக்குள் இறந்து கிடந்தனர். அதிகாரிகள் தற்போது இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் தற்கொலையாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் விசாரித்து வருகின்றனர்.

இந்த துயரமான சம்பவம் இன்று அதிகாலையில் தெரியவந்தது எனவும் தடவியல் குழு சம்பவ இடத்தை சோதனை செய்து வருகிறது எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

"எங்கள் தடயவியல் குழு சம்பவ இடத்தை அடைந்துள்ளது. விபத்துக்கான காரணங்களை அறிய காரை முழுமையாக ஸ்கேன் செய்து வருகிறோம். வெளிவந்த சில உண்மைகள் முதன்மையாக இது தற்கொலைதான் என்பதைக் குறிக்கின்றன" என்று டிஎஸ்பி பஞ்ச்குலா ஹிமாத்ரி கௌசிக் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், "ஓஜாஸ் மருத்துவமனைக்கு ஆறு பேர் கொண்டு வரப்பட்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. நாங்கள் அங்கு சென்றபோது, ​​அவர்கள் அனைவரும் இறந்துவிட்டதாகக் கண்டுபிடித்தோம். மற்றொரு நபர் செக்டார் 6 இல் உள்ள சிவில் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார்; அவரும் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

முதல் பார்வையில், இது தற்கொலை என்று தெரிகிறது. அனைத்து விசாரணை அதிகாரிகளும் சம்பவ இடத்தில் உள்ளனர். இறந்தவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.” எனத் தெரிவித்தார்.

இறந்தவர்களின் அடையாளங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. வாகனத்தின் தடயவியல் பரிசோதனை மற்றும் சம்பவ இடத்திலிருந்து சூழ்நிலை ஆதாரங்களை சேகரிப்பது உட்பட போலீசார் முழுமையான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.