UPI Payment: இந்தியாவில் பயன்படுத்தப்படும் பணிப்பரிவர்த்தனைக்கான யுபிஐ சேவை, தற்போது 7 நாடுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.


யுபிஐ பணப்பரிவர்த்தனை:


 இந்தியாவில் எந்த மூலைக்குச் சென்றாலும், கையில் பணமே வேண்டாம். வங்கிக் கணக்கில் பணமும், அதோடு இணைக்கப்பட்டுள்ள ஒரு செல்போனும் மட்டுமே, கையில் இருந்தால் போதும் என்ற சூழலை யுபிஐ சேவை ஏற்படுத்தியுள்ளது. மாநகரங்களில் உள்ள பெரும் கடைகளில் மட்டுமின்றி, உள்ளூரில் உள்ள பொட்டிக் கடை வரையும் ஒரு க்யூஆர்கோடை ஸ்கேன் செய்து பணத்தை செலுத்திவிடலாம். இதனால், இந்திய பணப்பரிவர்த்தனை தற்போது அதிவேகமாக டிஜிட்டல் மயமாகிறது. 


7 நாடுகளில் யுபிஐ சேவை:


இந்நிலையில், இந்தியாவில் உள்ள யுபிஐ சேவை தற்போது 7 வெளிநாடுகளிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரையில் உள்ளூரில் மட்டுமே இருந்த இந்த சேவை தற்போது, கடல் கடந்து ஐரோப்பியா வரை பரவியுள்ளது. அதன்படி, பிரான்சு, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், மொரிஷியஸ், இலங்கை, நேபாளம் மற்றும் பூடான் ஆகிய 7 வெளிநாடுகளில் யுபிஐ சேவை அங்கீகரிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது மேக் இன் இந்தியா மேக், ஃபார் தி வோர்ல்ட் என்ற அம்சத்தை வெளிக்ககாட்டுவதாகவும் அரசு தரப்பு தெரிவித்துள்ளது. யுபிஐ சேவையை விரிவுபடுத்துவது தொடர்பாக 30 நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக, கடந்த 2022 ஆம் ஆண்டில் மத்திய அரசு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 






யுபிஐ சேவையின் அபார வளர்ச்சி:


கடந்த 2016ம் ஆண்டு மிகவும் எளிமையாக எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் தான், யுபிஐ சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இந்த சேவை குறைந்த காலகட்டத்திலேயே பயனாளர்களை கவர்ந்து, அபார வளர்ச்சி பெற்றது.  2020 ஆம் ஆண்டில், சீனா மற்றும் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி, 25.50 பில்லியன் வருடாந்திர பரிவர்த்தனைகளுடன் உலகின் மிகப்பெரிய நிகழ்நேர கட்டண சந்தையாக மாறியது.  ஆகஸ்ட் 2023 இல், இந்தியா முதல் முறையாக 10 பில்லியன் UPI பரிவர்த்தனைகள் என்ற புதிய மைல்கல்லை எட்டியது.  அதே ஆண்டு டிசம்பரில், 2022-23 நிதியாண்டில் டிஜிட்டல் பேமெண்ட் பரிவர்த்தனைகளில் 62% UPI மூலம் நடைபெற்றது.


இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் துறையில் PhonePe, Google Pay மற்றும் Paytm ஆகிய நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன.  UPI பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் (மார்ச் 2022 தரவு), PhonePe 46.7% சந்தை பங்களிப்புடன் முன்னணியில் உள்ளது.  அதைத் தொடர்ந்து Google Pay 34% மற்றும் Paytm 15.4%. மறுபுறம், BHIM 0.46% பங்கைக் கொண்டிருந்தது.