வழக்கமாக நாடாளுமன்ற கூட்டம் ஆண்டுக்கு மூன்று முறை நடக்கும். பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்கால கூட்டத்தொடர், குளிர்கால கூட்டத்தொடர். அந்த வகையில் பட்ஜெட் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஏற்கனவே நடைபெற்று முடிந்தது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.


நாடாளுமன்றம் தொடங்கிய நாள் முதல் எதிர்க்கட்சிகள் தரப்பில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. மேலும் பிரதமர் இந்த விவகாரம் தொடர்பாக மக்களவை மாநிலங்களவையில் விளக்கம் அளிக்க வேண்டும் என கூறப்பட்டது ஆனால் அவர் தரப்பில் இருந்து எந்த பதிலும் தற்போது வரை இல்லை. இதனால் நேற்றைய தினம் பிரதமர் மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தரப்பில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இப்படி மக்களவை மாநிலங்களவை தொடங்கிய நாள் முதல் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். அமளிக்கிடையே நேற்று 7 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது.


நேற்று மக்களவையில் பிறப்பு, இறப்பு திருத்த மசோதாவை மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் குரல் வாக்கெடுப்பு மூலம் தாக்கல் செய்தார். நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான நோட்டீஸை தொடர்ந்து 5 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது. முக்கியமாக ஜம்மு காஷ்மீர் இட ஒதுக்கீடு திருத்த மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சி தரப்பில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் குரல் வாக்கெடுப்பு மூலம் தாக்கல் செய்தார். மேலும், மத்திய அமைச்சர் வீரேந்திர குமார், ஜம்மு-காஷ்மீர் எஸ்.சி. பட்டியல் திருத்த மசோதாவையும், மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா, ஜம்மு-காஷ்மீர் பழங்குடியினர் பட்டியல் திருத்த மசோதாவையும் தாக்கல் செய்தனர்.


சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை திருத்த மசோதாவை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தாக்கல் செய்தார். இந்த மசோதா அமலுக்கு வந்தால் பொதுப்பணித்துறை நிறுவனங்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்பை பாதிக்கும் என்று புரட்சிகர சோஷலிஸ்டு கட்சி உறுப்பினர் என்.கே.பிரேமசந்திரன் எதிர்ப்பு தெரிவித்தார். அதாவது மிகவும் ஆழத்தில் இருக்கும் தங்கம், வைரம், துத்தநாகம் ஆகியவற்றை எடுக்க தனியார் நிறுவனங்களுக்கு இந்த மசோதா அனுமதி வழங்கும் என்பதால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.


வன பாதுகாப்பு மசோதாவும் நேற்றைய தினம் எதிர்ப்புக்கு மத்தியில் தாக்கல் செய்யப்பட்டது. நாட்டின் எல்லை பகுதியில் 100 கிமீ தொலைவில் இருக்கும் பகுதிகள் வன பாதுகாப்பு சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும், அப்படி விலக்கு அளிக்கப்பட்ட நிலங்களில் தேசிய பாதுகாப்பு மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த கட்டமைப்புகள் அமைக்கப்படும். குறிப்பாக ரயில் நிலையம் அல்லது ரயில் பாதை மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் இருக்கும் நிலங்கள் வனம் என்ற பட்டியலில் இருந்து விலக்கு அளிக்கப்படும். இதனால் இந்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் சிறிய நேரம் விவாதம் நடந்தது. அதனை தொடர்ந்து இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.


மக்களவையை போலவே மாநிலங்களவையில் அமைச்சர் அர்ஜுன் முண்டா ஹிமாச்சல பிரதேசத்தில் ஹட்டீ என்ற பிரிவை சேர்ந்த மக்களை பட்டியலினத்தில் சேர்ப்பதற்கான மசோதாவை தாக்கல் செய்தார்.