சாதிப்பதற்கும், தனது கனவுகளை நனவாக்குவதற்கும் வயது ஒரு தடையே இல்லை என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. அந்த முன்னுதாரணங்களின் வரிசையில் தற்போது கேரளாவைச் சேர்ந்த மூதாட்டி ஒருவரும் இணைந்துள்ளார். கேரளா மாநிலம் கொச்சியைச் சேர்ந்தவர் ஆரிபா வி.கே. 69 வயதான இவர் பெரியார் ஆற்றை நீச்சல் அடித்து கடந்து சாதனை படைத்துள்ளார்.
கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஆலுவா பகுதியைச் சேர்ந்தவர் ஆரிபா விகே. கேரளாவில் கடந்த 2018ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின்போது மிக கடுமையாக பாதிக்கப்பட்டார். அப்போதுதான், நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்ந்துள்ளார். இருப்பினும், தன்னால் முடியாவிட்டாலும் தனது பேரக்குழந்தைகள் நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பியுள்ளார்.
இதையடுத்து, ஆலுவா சிவன்கோவில் அருகே நீச்சல் பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர் ஷாஜி வலச்சேரியிடம் தனது பேரக்குழந்தைகளை அழைத்துச் சென்றுள்ளார். தனது பேரக்குழந்தைகள் நீச்சல் பயிற்சி எடுப்பதை கண்ட ஆரிபாவிற்கும் நீச்சல் அடிக்க வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. இதனால், பயிற்சியாளர் ஷாஜியிடம் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
அவரும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள் என்று கூறியுள்ளார். ஆரிபாவின் ஆசைக்கு அவரது குடும்பமும் உறுதுணையாக நின்றது. இதையடுத்து, கடந்த ஓராண்டாக ஆரிபா தீவிர நீச்சல் பயிற்சி எடுத்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று பெரியார் ஆற்றை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய ஆரிபா விகே “அனைவரும் நீச்சல் அடிக்க கற்றுக்கொள்ள வேண்டும். பெரியார் ஆற்றை நீந்திக் கடந்த பிறகு நான் மிகவும் உற்சாகமாக உள்ளேன். எனது மனதை ஒரு 9 வயது குழந்தையைப் போல வைத்துள்ளேன்.” என்று கூறினார். ஆரிபாவுடன் இணைந்து 70 வயதான விஸ்வாம்பரன் என்ற முதியவரும் பெரியார் ஆற்றை நீந்திக் கடந்துள்ளார். திருச்சூர், அன்னமண்டா பகுதியைச் சேர்ந்த இவரும் சமீபத்தில்தான் நீச்சல் பயிற்சி பெற்றுள்ளார்.
இவர்களுடன் இவர்களது பயிற்சியாளர் ஷாஜி வலச்சேரியும் உடன் சென்றுள்ளார். பெரியார் ஆற்றை 69 வயது மூதாட்டியும், 70 வயது முதியவரும் நீந்திக் கடந்திருப்பது பலருக்கும் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் இருவருக்கும் பலரும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர். இவர்களுக்கு பயிற்சி அளித்துள்ள ஷாஜி வலச்சேரி இதுவரை ஏராளமானோருக்கு நீச்சல் பயிற்சி அளித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்