61 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஓட்டுநர் ஒருவரை புகார் அளிக்க சென்று, தனது வங்கிக்கணக்கில் இருந்த சுமார் ஒரு லட்சம் ரூபாயை பறிக்கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
பெஸ்ட் ஓட்டுநரால் வந்த சிக்கல் :
லோயர் பரேலில் (மேற்கு) என் எம் ஜோஷி மார்க்கில் உள்ள கடல்சார் சேவை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர் பாதிக்கப்பட்ட 61 வயது பெண் . இவர் கடந்த ஜூலை 19 ஆம் தேதி தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த பிரபல பெஸ்ட் (Brihanmumbai Electric Supply and Transport) பேருந்து பெண்மணியின் ஸ்கூட்டி மீது மோதியது. இதனால் அவர் வாகனத்துடன் கீழே விழுந்தார். பேருந்து ஓட்டுனரின் அவசரம் மற்றும் கவனக்குறைவு காரணமாக இந்த விபத்து நேரிட்டதாக கூறப்படுகிறது.
புகார் அளித்த பெண் :
பேருந்து ஓட்டுநர் அலட்சியம் செய்ததால் இதனை அவர் சம்பந்தப்பட்ட நிர்வாகத்திற்கு புகார் அளிக்க விரும்பி இணையத்தில் பெஸ்ட் பேருந்தின் புகார் எண்ணை தேடியிருக்கிறார். அப்போது இணையத்தில் வந்த ஹெல்ப்லைன் எண்ணை கொண்டு அழைப்பை மேற்க்கொண்டு நடந்தவற்றை கூறியிருக்கிறார். எதிர்முனையில் பேசிய நபர் நிச்சயம் நாங்கள் உதவி செய்கிறோம் என கூறியிருக்கின்றனர். அதன் பின்னர் சில நிமிடங்களில் மீண்டும் ஒரு அழைப்பு வந்திருக்கிறது.அழைப்பாளர் தன்னை ஒரு நுகர்வோர் நீதிமன்றத்தின் பிரதிநிதி என்று கூறியிருக்கிறார்.மேலும் தான் ஒரு லிங்கை தற்போது அனுப்புவேன்.அதனை பூர்த்தி செய்து அனுப்புங்கள் . மேலும் புகாரை பரிசீலிப்பதற்காக பெயரளவிலான 5 ரூபாய் கட்டணத்தை செலுத்துமாறும் கூறியிருக்கிறார்.
ஒரு லட்சம் பறிபோனது :
அந்தப் பெண் இணைப்பைக் கிளிக் செய்து விவரங்களைச் சமர்ப்பித்தபோது,அந்த பெண்ணுக்கு அடுத்தடுத்து குறுஞ்செய்திகள் வர தொடங்கியுள்ளது.இறுதியில் ஆறு பரிவர்த்தனைகளில் தனது வங்கிக் கணக்கிலிருந்து சுமார் ₹97,666 இழந்ததாக அவர் சனிக்கிழமை காவல்துறையில் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப யுக்தியை பயன்படுத்தி அப்பாவி பெண்ணிடம் சைபர் குற்றவாளிகள் பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.
வழக்கு பதிவு :
இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 419 (நபர் மூலம் ஏமாற்றுதல்) மற்றும் 420 (ஏமாற்றுதல்) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவுகள் 66C (அடையாளத் திருட்டு) மற்றும் 66D (கணினி வளங்களைப் பயன்படுத்தி நபர் மூலம் ஏமாற்றுதல்) ஆகியவற்றின் கீழ் முகம் தெரியாத சைபர் குற்றவாளிகள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.