ஒடிசாவில் பழங்குடியினர் அதிகம் வாழும் மயூர்பஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு கனவு நனவானதே என்றே சொல்லலாம். குடியரசு தலைவர் மாளிகையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுடன் அவர்களுக்கு மதிய உணவு சாப்பிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.


முர்முவின் சொந்த மாவட்டத்தைச் சேர்ந்த 60 பேரும், நாட்டின் முதல் பழங்குடியின குடியரசு தலைவரின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டவர்கள் ஆவர். புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள திரெளபதி முர்மு அளித்த மதிய உணவு விருந்தில் கலந்து கொள்ளுமாறு அவர்களுக்கு குடியரசு தலைவர் மாளிகையின் அலுவலர்கள் அழைப்பு விடுத்தபோது, ​​அவர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.


இதுகுறித்து மயூர்பஞ்ச் மாவட்டத்தின் முன்னாள் ஜில்லா பரிஷத் தலைவரான சுஜாதா முர்மு கூறுகையில், "நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நடந்த குடியரசு தலைவர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். அவரும் இன்னும் சில பெண் விருந்தினர்களும் சந்தால் பழங்குடியின பாரம்பரிய சேலை அணிந்து பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.


இதே போன்ற அனுபவத்தை கயாமணி பெஷ்ரா மற்றும் டாங்கி முர்மு பெற்றுள்ளனர். நீண்ட காலமாக குடியரசு தலைவர் முர்முவுடன் நெருக்கமாக இருந்த இருவரும் பதவியேற்பு விழாவிற்கு அழைக்கப்பட்டிருக்கின்றனர். விருந்தில் கலந்து கொள்ளுமாறு முர்மு தங்களை அழைப்பார் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை.


முர்முவின் சொந்த மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கு குடியரசு தலைவர் மாளிகை சுற்றி காண்பிக்கப்பட்டதாக குடியரசு தலைவர் மாளிகை தெரிவித்துள்ளது. குடியரசு தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லத்திலிருந்து வெளியேறும் போது விருந்தினர்களுக்கு இனிப்புப் பொட்டலமும் வழங்கப்பட்டது. இது ஒரு மறக்கமுடியாத அனுபவம் என்று சுஜாதா முர்மு கூறினார்.


மதிய உணவு மெனு பற்றி கேட்டபோது, ​​​​அது முற்றிலும் சைவ உணவு என்று பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர். ஏனெனில், குடியரசு தலைவர் அசைவ உணவை சாப்பிடுவதில்லை என்றும் பூண்டு மற்றும் வெங்காயம் கூட சேர்த்து கொள்ளமாட்டார் என முர்முவுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.


ஸ்வீட்கார்ன் வெஜிடபிள் சூப், பாலக் பனீர், தால் அர்ஹர் தட்கா, கோபி கஜர் பீன்ஸ், மலாய் கோஃப்தா, ஜீரா புலாவ், நான், புதிய பச்சை சாலட், பூண்டி ரைதா, கேசர் ரஸ்மலை, பழங்கள் ஆகியவை விருந்தில் வழங்கப்பட்டது. இருப்பினும், குடியரசு தலைவர் மாளிகைக்குள் செல்போன்கள் மற்றும் கேமராக்கள் அனுமதிக்கப்படாததால், குடியரசு தலைவருடன் செல்ஃபி எடுக்க முடியவில்லை என விருந்தில் கலந்து கொண்ட சிலர் அதிருப்தி தெரிவித்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண