இந்தியாவின் காஷ்மீரில் உள்ள பஹல்காமில் தீவிரவாத தாக்குதல் நடந்ததையடுத்து, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா பதில் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், அந்த நடவடிக்கையின்போது, பாகிஸ்தானின் 6 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக, இந்திய விமானப்படை தளபதி அமர்ப்ரீத் சிங், முதன் முறையாக தெரிவித்துள்ளார்.

விமானப்படை தளபதி கூறியது என்ன.?

பெங்களூருவில் இன்று நடந்த விமானப்படை அதிகாரிகளுக்கான கருத்தரங்கில், இந்திய விமானப்படை தளபதி ஏ.பி. சிங் கலந்துகொண்டார். பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, பகிஸ்தான் விமானப்படைக்கு சொந்தமான 6 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவித்தார். அவற்றில் 5 போர் விமானங்கள் என்றும், மற்றொரு விமானம் AWACS(Airborne Warning and Control System) என அழைக்கப்படும் வான்வழி கண்காணிப்பு மற்றும் கட்டப்பாட்டு அமைப்பு விமானம் என கூறினார்.

ஜகோபாபத் விமான தளத்தில் ஹேங்கரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எஃப்-16 ரக போர் விமானங்களும் விமானப்படை தாக்குதலில் தகர்க்கப்பட்டதாகவும் விமானப்படை தளபதி தெரிவித்தார்.

மேலும், இந்திய ராணுவத்திடம் உள்ள ரஷ்ய தயாரிப்பு எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பினார் இந்த வெற்றி சாத்தியமானதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த தாக்குதல் மிகவும் சிறப்பாக திட்டமிட்டப்பட்டு மேற்கொள்ளப்பட்டதாகவும் விமானப்படை தளபதி ஏ.பி. சிங் பெருமிதம் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியின்போது, மே 7 தாக்குதலின்போது, தீவிரவாத இலக்குகள் சேதமடைந்த செய்ற்கைக்கோள் படங்கள், அதாவது தாக்குதலுக்கு முன் மற்றும் பின் என படங்களை திரையிட்டு விளக்கமளித்தார்.

‘ஆபரேஷன் சிந்தூர்‘ நடத்தப்பட்டது ஏன்.?

கடந்த ஏப்ரல் மாதம், ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில்,  சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து நடந்த விசாரணையில், தாக்கதலில் ஈடுபட்டது பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான தி பீப்பிள்ஸ் ஃபிரண்ட் என்ற அமைப்பு என்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, தீவிரவாதிகளுக்கு அதற்கு பதிலடி  கொடுக்கும் விதமாக, ‘ஆபரேஷன் சிந்தூர்‘ என்ற பெயரில் இந்தியா துல்லிய தாக்கதலை நடத்தியது. இந்த தாக்குதலில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டன- இந்த தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து, பாகிஸ்தான் இந்திய எல்லைப்பகுதிகளில் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. அதை இந்திய ராணுவம் முறியடித்த நிலையில், இரு நாடுகளுக்கும் சில நாட்கள் நீடித்த மோதல், பின்னர் முடிவுக்கு வந்தது. இந்த தாக்குதலின்போது, இந்திய விமானங்கள் சுடப்பட்டதாக கூறப்பட்டு சர்ச்சை எழுந்தது. அதேபோல், இந்தியா பாகிஸ்தானின் எத்தனை விமானங்களை சுட்டு வீழ்த்தியது என்பதிலும் சர்ச்சைகள் இருந்து வந்தன. ஏனெனில், இந்தியாவின் 3 ரஃபேல் உட்பட 6 விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தெரிவித்தது.

இந்த சூழலில் தான், இந்திய விமானப்படை தளபதி தற்போது முதன் முறையாக, பாகிஸ்தானின் 6 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவலை வெளியிட்டுள்ளார்.