காஷ்மீர் பள்ளத்தாக்கில் பணிபுரியும் ஊழியர்களுக்கான 1025 போக்குவரத்து தங்கும் விடுதிகள் தயார் என மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் ராஜ்ஜிய சபையில் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தின் இந்த ஆண்டிற்கான மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 18ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடரின் முக்கிய அம்சமாக பார்க்கபடுவது குடியரசுத் தலைவர் தேர்தல் மற்றும் துணை குடியரசுத் தலைவர் தேர்தல். இதில் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே முடிந்து விட்டநிலையில், துணை குடியரசுத் தலைவருக்கான தேர்தல் ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி நடை பெறவுள்ளது.
இந்த கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக, காஷ்மீர் பள்ளத்தாக்கில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பணிபுரியும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கான போக்குவரத்து தங்கும் விடுதிகள் அமைப்பது தொடர்பாக 2015ஆம் ஆண்டு பிரதம மந்திரி மேம்பாட்டு தொகுப்பில் இருந்து 6000 தங்கும் விடுதிகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும் ராஜ்ய சபை உறுப்பினருமான திக்விஜய்சிங் எழுப்பியிருந்த கேள்விக்கு, பதில் அளிக்கும் விதமாக ராஜ்ய சபாவில் இன்று (20/07/2022) மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சர் நித்தியானந்த ராய் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பானது, ”2015ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பிரதம மந்திரியின் மேம்பாட்டு தொகுப்பின் கீழ், காஷ்மீர் பள்ளத்தாக்கில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான 6000 போக்குவரத்து தங்கும் விடுதிகள் அமைக்கும் திட்டத்தின் படி, இதுவரை 1,025 தங்கும் விடுதிகள் கட்டி முடிக்கப்பட்டுவிட்டன. மேலும், 1,872 தங்கும் விடுதிகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மீதமுள்ள தங்கும் விடுதிகள் கட்டப்படுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன” எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்