20 ரூபாய் டீக்கு ரூ.50 சர்வீஸ் சார்ஜ் கொடுத்து ரயில் பயணி ஒருவர் இன்ஜினைவிட சூடாகி வெகுண்டெழுந்துள்ளார்.


முன்பெல்லாம் விமானத்தில் தான் சர்வீஸ் சார்ஜோடு சேர்த்து சாதாரண காபி, டீக்கு கூட தாறுமாறு காசு வரும் என்பார்கள். அதனால் ரயில் எப்போதும் சாமான்ய மக்களின் பயணத் தேர்வாக இருந்தது. ஆனால், சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்ற பயணி ஒருவர் ஒரு கப் டீ வாங்க. அதற்கு அவர் கொடுத்த விலை ரூ.70. டீயின் விலை என்னவோ ரூ.20 தானாம். ஆனால் அதற்கான சேவைக் கட்டணம் தான் ரூ.50 ஆம். ஒரு கப் டீக்கு ரூ.70 கொடுத்துள்ளார். 


சதாப்தி ரயிலில் அவர் டெல்லியில் இருந்து போபாலுக்கு கடந்த ஜூன் 28 ஆம் தேதி பயணித்துள்ளார். அப்போது தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. 


இதற்கு ஆதாரமாக பல்கோவிந்த் வர்மா என்ற அந்த நபர் தனது ட்விட்டர், ரெட்டிட் சமூக வலைதள கணக்குகளில் இன்வாய்ஸை பகிர்ந்துள்ளார். அது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.






ரயில்வே நிர்வாகம் விளக்கம்:
பல்கோவிந்த் வர்மாவின் போஸ்ட் வைரலாக நெட்டிசன்கள் இந்திய ரயில்வேயை திட்டித் தீர்த்தனர். இந்த நிலையில் ரயில்வே துறை இது தொடர்பாக விளக்கமளித்துள்ளது. சதாப்தி ரயில்களில் பயணிக்கும்போது ரயில் பயணி தனது உணவை டிக்கெட் புக் செய்யும்போதே முன் பதிவு செய்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் இது போன்று சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.


இது குறித்து 2018லேயே சுற்றறிக்கை அனுப்பியிருப்பதாக தெரிவித்துள்ளது. அதில், ஒரு பயணி ரயில் டிக்கெட் புக் செய்யும்போதே உணவுக்கான ஆர்டர் கொடுக்காமல் விட்டுவிட்டு பின்னர் ரயிலில் ஏறிய பின்னர் உணவு ஆர்டர் செய்தால் ஒவ்வொரு சாப்பாட்டுக்கும் ரூ.50 சேவைக் கட்டணம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளோம் என சுட்டிக்காட்டியுள்ளது. இது காஃபி, டீக்கும் பொருந்தும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


முன்பெல்லாம், சதாப்தி, ராஜ்தானி ரயில்களில் உணவு இலவசமாக வழங்கப்பட்டது. இப்போது ரயில் கட்டணத்தைப் பிரித்து உணவு தேவை என்றால் ஒரு கட்டணம், வேண்டாம் என்றால் ஒரு கட்டணம் என்று மாற்றப்பட்டுள்ளது. இதை பயணிகளும் தெரிந்து கொண்டால் பயணித்தின் போது இதுபோன்ற தேவையற்ற அசவுகரியங்களை தவிர்த்துக் கொள்ளலாம்.