Pneumonia: சீனாவில்  நிமோனியா காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளன. 


சீனாவில் பரவும் நிமோனியா காய்ச்சல்


அண்டை நாடான சீனாவில் தற்போது எச்9என்2 எனும் சுவாச பிரச்னை ஏற்படுத்தும் நிமோனியா காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக வடக்கு சீனாவில் ஏரளமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, குழந்தைகள் இந்த வகை காய்ச்சலால் எளிதாக பாதிக்கப்படுகின்றனர். நிமோனியா பாதிப்பால், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளில் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக உள்ளூர் ஊடகங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிமோனியா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிமோனியா காய்ச்சலால் இதுவரை எந்த உயிரிழப்பு ஏற்படவில்லை.  இதை சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தான் கடந்த நவம்பர் 13ஆம் தேதி அலர்ட் கொடுத்தது. அதாவது, குழந்தைகளிடையே சுவாச நோய்கள் அதிகரிப்பதாகக் கூறியிருந்தது. கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்ட பிறகு வரும் முதல் குளிர்காலம் என்பதால் பாதிப்பு அதிகமாக உள்ளதாக கூறப்பட்டிருந்தது. 


சீனாவை உன்னிப்பாக கவனிக்கு இந்தியா


சீனாவில் சுவாச பிரச்னை ஏற்படுத்தும் நிமோனியா காய்ச்சல் பரவல் குறித்து சீனாவை உன்னிப்பாக இந்தியா கவனித்து வருகிறது. அதோடு, இந்தியாவில் இந்த வகை பாதிப்பு இன்னும் கண்டறியப்படாத நிலையில், சீனாவில் இருந்து இங்கு பரவுவதை தடுக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே, இந்த விவகாரத்தில் இரண்டு முறை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. முதல் அறிக்கையில், சீனாவில் நிலவி வரும் சூழலை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், எந்த சூழல் வந்தாலும் அதனை எதிர்கொள்ள இந்தியா தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தது. இரண்டாவது அறிக்கையில், அனைத்து மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளை தயார் நிலையில் வைக்க வேண்டும் என்றும்  கூறப்பட்டிருந்தது. 


உச்சக்கட்ட அலர்டில் 5 மாநிலங்கள்


இந்நிலையில், மத்திய அரசின் உத்தரவுக்கு பிறகு ராஜஸ்தான், கர்நாடகா, குஜராத், உத்தரகண்ட், ஹரியானா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளன. அந்தந்த மாநிலங்களில் மாவட்ட நிர்வாகங்கள்  அலர்ட்டில் இருக்கும்டி அறிவுறுத்தியுள்ளன.  "பருவகால காய்ச்சல் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காய்ச்சலின் அறிகுறிகள் இருந்தால் உடனே சிகிச்சை பெற வேண்டும். காய்ச்சல், குளிர், உடல்சோர்வு, இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் ஆகும். காய்ச்சலின்போது,  வாய் மற்றும் மூக்கை தோடக் கூடாது. அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும். இருமல், தும்பலின்போது மூக்கு, முகத்தைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும். நெரிசலான இடங்களில் மாஸ்க்கை பயன்படுத்த வேண்டும்"  என்று கர்நாடகா அரசு தெரிவித்திருந்தது.


இதனை தொடர்ந்து, குஜராத், உத்தரகண்ட், ஹரியானா மாநிலங்களும் மாவட்ட நிர்வாகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை, நிமோனியா வழக்குகள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை. இருப்பினும், விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் தயார்நிலையில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.