நவம்பர் 22 அன்று பிர் பஞ்சால் பள்ளத்தாக்கின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை விரட்டியடிக்கும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சண்டையில் மறைந்திருந்த பயங்கரவாதிகளும் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகளுடன் மோதல்:
ஜம்முவை தளமாகக் கொண்ட இராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், நவம்பர் 19 அன்று கலாகோட் பகுதியின் குலாப்கர் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பது பற்றிய உளவுத்துறை தகவல் கிடைத்ததை தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. நவம்பர் 22 ஆம் தேதி இரு தரப்பினருக்கும் மோதல் போக்கு ஏற்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.
ராணுவத் துறையின் செய்தி தொடர்பாளர் இது தொடர்பாக கூறுகையில், ”இரு தரப்பினருக்கும் கடுமையான துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்நாட்டின் பெண்கள் மற்றும் குழந்தைகளை காக்கும் பணியில் ராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் பயங்கரவாதிகள் பலரும் காயமடைந்துள்ளனர். அவர்களை சுற்றிவளைத்து விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என கூறியுள்ளார்.
பிர் பஞ்சல் பள்ளத்தாக்கு:
ரஜோரியின் கலாகோட் பகுதியில் உள்ள பாஜி மால் குக்கிராமத்தில் காலை 10 மணியளவில் பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகளை கண்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த தாக்குதல் சம்பவம் அடர்ந்த வனப்பகுதியில் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பயங்கரவாதிகளின் எண்ணிக்கை மூன்றாக இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
பயங்கரவாதிகள் அப்பகுதியில் இருந்து தப்பிக்காமல் இருக்க அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பிர் பஞ்சல் பள்ளத்தாக்கு 2020 முதல் மிக அதிகமான பயங்கரவாத நடவடிக்கையை கண்டுள்ளது. இந்த ஆண்டு பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல்கள் அதிகரித்துள்ளன. இந்த ஆண்டு ஜம்மு பகுதியில் 13 பாதுகாப்பு படையினரும் 22 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.