ரயில் தண்டவாளத்தில் சிக்கி, ரயில் மோதி யானைகள் கொல்லப்படுவது காலங்காலமாக நடந்துவரும் பிரச்சினை. பேருயிர்கள் இழப்பிற்கு அரசு இதுவரை ஏந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே கசப்பான உண்மை.
அந்தவகையில், 2018-2021 ஆண்டு காலத்தில் 45 யானைகள் ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், மக்களவையில் எழுந்த கேள்விக்கு, எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், கடந்த 2018-2019-இல் 19 யானைகள், 2019-2020 இல் 14 யானைகள் மற்றும் 2020-2021 -இல் 12 யானைகள் ரயில்களில் அடிபட்டு பலியாகியுள்ளன.
2018-2019 ஆம் ஆண்டில், ஒடிசாவில் ஏழு யானைகளும், மேற்கு வங்காளத்தில் ஆறு யானைகளும், கர்நாடகா மற்றும் அசாமில் தலா இரண்டு யானைகளும், கேரளா மற்றும் உத்தரகாண்டில் தலா ஒரு யானையும் பலியாகியுள்ளன என்று அமைச்சர் தாக்கல் செய்த ஆண்டு வாரியான தரவுகள் தெரிவிக்கின்றன.
2019-2020ல் மேற்கு வங்கத்தில் ஐந்து யானைகளும், கேரளாவில் மூன்று யானைகளும், உத்தரகண்ட் மற்றும் அசாமில் மாநிலங்களில் தலா இரண்டு யானைகளும், ஒடிசா மற்றும் ஜார்கண்டில் தலா ஒரு யானையும் ரயில் தண்டவாளத்தில் பலியாகியுள்ளன.
2020-2021 ஆம் ஆண்டில், அசாமில் மொத்தம் 5 யானைகளும், ஒடிசாவில் நான்கு யானைகளும், கர்நாடகா, ஜார்கண்ட் மற்றும் தமிழ்நாட்டில் தலா ஒரு யானையும் ரயில் தண்டவாளத்தில் கொல்லப்பட்டதாக அமைச்சரின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற சம்பவங்களில் யானைகள் இறப்பதைத் தடுக்க, ரயில்வே அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் யாதவ் கூறினார்.
அமைச்சர் தனது பதிலில் பட்டியலிடப்பட்டுள்ள பல தடுப்பு நடவடிக்கைகளில், அடையாளம் காணப்பட்ட யானை வழித்தடங்கள் மற்றும் வாழ்விடங்களில், ரயில்கள் செல்ல நிரந்தர மற்றும் தற்காலிக வேகக் கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்ட இடங்களில் யானைகள் நடமாடுவதற்கு சுரங்க பாதை மற்றும் சாய்வுதளங்கள் அமைத்தல்; தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் வேலி அமைத்தல், லோகோ பைலட்டுகளை எச்சரிக்கும் விதத்திலான பலகைகள்; மற்றும் ரயில் பணியாளர்கள் மற்றும் ஸ்டேஷன் மாஸ்டர்கள் விழிப்புணர்வோடு இருபதற்கான அறிவுறுத்தல் ஆகியவை அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆண்டுதோறும் பேருயிர்களான யானைகள் ரயில் விபத்துகள், தண்டவாளத்தில் சிக்கி உயிரிழப்பதற்கு, வனத்துறை, அரசு மற்றும் ரயில்வே துறையில் அலட்சிய போக்கே காரணம் என்கின்றனர் சூற்றுச்சூழல் மற்றும் வன உயிரின பாதுகாப்பு ஆர்வலர்கள். அரசு இதற்கென நடவடிக்கை மேற்கொள்வதாக சொல்லப்பட்டாலும், அதற்கான பலன் கண்ணுக்குத் தெரியவில்லையே என்பது அவர்களின் கேள்வியாக இருக்கிறது. அரசுத்துறைகளிடம் இப்படியா அலட்சிய போக்கு தொடரும் வரை யானைகளின் உயிர்கள் பறிபோவதைத் தடுக்க முடியாது.