மத்திய ரயில்வே வாரியம், ஆட்சேர்ப்புக்கான தேர்வு முறைகளில் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி, பிஹாரில் தேர்வர்கள் ரயில்களுக்குத் தீவைத்துக் கொளுத்தியும் கற்களை எறிந்தும் வன்முறையில் ஈடுபட்டது பேசுபொருளாகி உள்ளது. வன்முறையில் ஈடுபடுவோர் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்படும் என்று ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் எச்சரிக்கை விடுத்தும், வன்முறை கட்டுக்கடங்காமல் சென்றதற்குப் பின்னால் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. 


ஆர்ஆர்பி 


மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் ஆட்சேர்ப்பு வாரியமே ஆர்ஆர்பி எனப்படுகிறது. இதன் முக்கியப் பணி குரூப் சி பணியாளர்களைத் தேர்வு செய்துகொடுப்பது. நாடு முழுவதும் 21 ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. வழக்கமாக ரயில்வே பணியிடங்களுக்காக ஆட்களைத் தேர்வு செய்ய, ஒற்றைத் தேர்வு முறையே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. எனினும் அசாதாரணமான அளவில் தேர்வர்கள் விண்ணப்பிக்கும்போது, அவர்களைத் தரத்தின் அடிப்படையில் வடிகட்ட இரண்டு கட்ட கணினிவழித் தேர்வு முறை (CBT1, CBT2) நடத்தப்பட்டு வருகிறது. 


இதற்கிடையே 2019-ல் ரயில்வே துறையில் தொழில்நுட்பம் சாராத பணிகளுக்கான தேர்வு (RRB-NTPC) அறிவிப்பு வெளியானது. குறிப்பாக ரயில்வே இளநிலை எழுத்தர், ரயில்வே உதவியாளர், காவலர், நேரக் காவலர் போன்ற அடிப்படைப் பணிகளுக்கும் ஸ்டேஷன் மாஸ்டர் வரையிலான உயர்நிலைப் பணியிடங்களுக்கும் 35,281 காலிப் பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியானது.




இதில், 12ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்ற அடிப்படைத் தகுதியோடு சுமார் 11 ஆயிரம் பதவிகளுக்கான காலி இடங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மீதமுள்ள 24 ஆயிரம் உயர்நிலைப் பணியிடங்கள் அதிக ஊதியத்துடன் கூடியவை. இதற்குக் குறைந்தபட்சத் தகுதியாக பட்டப்படிப்பு இருந்தது.


வெவ்வேறு அடிப்படைத் தகுதியும் மாத ஊதியமும் 


அதாவது 6 வகையான பணிகளுக்குத் தேர்வு அறிவிக்கப்பட்டு, ஒவ்வொருகட்டப் பணிகளுக்கும் அடிப்படைத் தகுதியும் மாத ஊதியமும் வெவ்வேறாக நிர்ணயிக்கப்பட்டது. உதாரணத்துக்கு, இளநிலை எழுத்தர் (கடைநிலைப் பணி) வேலைக்கான சம்பளம் ரூ.19,900-ல் இருந்தும் ஸ்டேஷன் மாஸ்டர் (உயர்நிலைப் பணி) வேலைக்கான சம்பளம் ரூ.35,400-ல் இருந்தும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.


இந்தத் தேர்வுகளுக்கு நாடு முழுவதிலும் இருந்து சுமார் 1.25 கோடி பேர் விண்ணப்பித்தனர். தேர்வுகள் 2019 ஜூலை மாதத்துக்குள் நடக்கும் என்று தற்காலிகத் தேதி வழங்கப்பட்டது. ஆனால் அப்போது தேர்வு நடத்தப்படாமல், செப்டம்பர் மாதத்தில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. மீண்டும் மார்ச் 2020-க்குத் தள்ளி வைக்கப்பட்டது. திடீரெனப் பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக, தேர்வு மீண்டும் தள்ளிப்போனது. 


இறுதியாக ஏப்ரல் - ஜூலை 2020இல் கணினி வழியிலான முதல்கட்டத் தேர்வு நடந்தது. தனிமனித இடைவெளி உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, 133 ஷிஃப்டுகளில் 68 நாட்களுக்குத் தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிவுகள் கடந்த ஜனவரி 15ஆம் தேதி வெளியாகின. அதில் தகுதி பெற்றோருக்கான 2-வது கட்ட கணினிவழித் தேர்வு 2022 ஃபிப்ரவரி மாதத்தின் இடையில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. 




20 மடங்கு அதிகமான தேர்வர்கள்


முன்னதாக அதிகளவிலான தேர்வர்கள் ரயில்வே பணிக்கு விண்ணப்பிக்கும்போது, ஒவ்வொரு காலிப் பணியிடத்துக்கும் 10 மடங்கு, 15 மடங்கு அதிகமான தேர்வர்கள் இரண்டாம்கட்டத் தேர்வுக்குத் தெரிவு செய்யப்படுவது வழக்கமாக இருந்தது. இந்த முறை 20 மடங்கு அதிகமான தேர்வர்கள், அதாவது 1:20 என்ற விகிதத்தில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று அறிவிக்கப்பட்டது. 


இதன்மூலம் 35 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கு, 20 மடங்கு அதிகமாக சுமார் 7 லட்சம் தேர்வர்கள் தேர்வு செய்யப்பட்டதாகவும் அதில் பெரும்பாலானோர் பட்டதாரிகள் எனவும் புகார் கூறப்பட்டது. இதன்மூலம் தங்களின் வாய்ப்பு பறிக்கப்பட்டதாகப் பள்ளிப் படிப்பை முடித்துத் தேர்வெழுதிய தேர்வர்கள் பிஹாரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 24ஆம் தேதி பிஹாரில் உள்ள பட்னா ராஜேந்திர நகர் ரயில் நிலையத்தில் தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்குப் பின்னணியில் போட்டித் தேர்வு மையங்களைச் சேர்ந்த சிலரும் இருந்ததாகக் கூறப்பட்டது.


ரயில்வே விளக்கம்


எனினும் புகாரில் உண்மை இல்லை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (ஆர்ஆர்பி) ஆட்சேபணை தெரிவித்தது. இதுகுறித்து விளக்கமளித்த ஆர்ஆர்பி, ''தேர்வில் உயர்நிலைப் பணிக்குத் தகுதியான ஒருவர் கடைநிலைத் தேர்வு வரை ஆறு பதவிகளுக்கும் போட்டியிடத் தகுதியானவராகக் கருதப்படுவார். இதனால் ஆறு நிலை பணிகளுக்கான தேர்வுப் பட்டியலிலும் அவரது பெயர் இருக்கும். சிலருக்கு 5 பணி நிலைகளுக்கான பட்டியலிலும், சிலருக்கு 4 பணி நிலைகளுக்கான பட்டியலிலும், சிலருக்கு ஒரே ஒரு பணி நிலைக்கான பட்டியல் மட்டும் இருக்கும். 


அதனாலேயே ஒரே நபர் 6 பணியிடங்களுக்கும் போட்டி போடலாம் என்று வெளியான புகார் உண்மையற்றது. ஏனெனில் லெவல் 6, 5 என உயர்மட்டப் பணிகளுக்கான பதவியிடங்களுக்கு ஆவண சரிபார்ப்பு நடைபெறும். இதன்மூலம் சம்பந்தப்பட்ட நபர் ஒரே நேரத்தில் 2 பணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட முடியாது'' என்று ஆர்ஆர்பி விளக்கம் அளித்தது. 




ஒரே நபர் பல்வேறு நிலைப் பணிகளுக்கான தேர்வுக்குத் தேர்வு செய்யப்பட்ட நிலையில், 2வது கட்டமாக7 லட்சம் பேர் தேர்வு செய்யப்படவில்லை. 7 லட்சம் பதிவெண்கள் (7,05,446) மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன. எனினும் இந்த விளக்கத்தை ஏற்க பிஹார் தேர்வர்கள் மறுப்பு தெரிவித்தனர். அவர்களின் போராட்டம் வன்முறையாக வெடித்தது.


தேர்வெழுத வாழ்நாள் தடை


தேர்வர்கள் பிஹாரில் ரயில்களுக்குத் தீவைத்துக் கொளுத்தியும் கற்களை எறிந்தும் வன்முறையில் ஈடுபட்டனர். வன்முறையில் ஈடுபடுவோர் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டு, அவர்கள் தேர்வெழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும் என்று ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் எச்சரிக்கை விடுத்தது. எனினும், வன்முறை கட்டுக்கடங்காமல் சென்றது.


காவல்துறை தடியடி நடத்தித் தேர்வர்களைக் கலைத்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் என்று கருதிய தேர்வர்களை அருகிலிருந்த விடுதிகளுக்குச் சென்று தேடி, கதவுகளை உடைத்து காவல்துறை தாக்கியது. இதுகுறித்த வீடியோக்கள் வைரலான பிறகு 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 


ஒரு விசாரணைக் குழுவை அமைத்து, ஒட்டுமொத்தமாக, இந்த தேர்வு முறை உட்பட அனைத்தையும் விரிவாக விசாரித்து தீர்வு கண்ட பிறகே இந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவித்திருக்கிறது.


அதேநேரம், வன்முறையில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபடத் தூண்டியதாக பிரபல யூடியூபரும் போட்டித் தேர்வு மையப் பயிற்சியாளருமான கான் சார் உள்ளிட்ட 6 ஆசிரியர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.




உயர்மட்ட அதிகாரக் குழு


இதுகுறித்து விசாரணை செய்ய மத்திய ரயில்வே, உயர்மட்ட அதிகாரக் குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழு முதல் கட்டத் தேர்வு முடிவுகள் குறித்தும், 2வது கட்டத் தேர்வு நடைபெறும் விதம் குறித்தும் விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களின் புகார்களை ​rrbcommittee@railnet.gov.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். தேர்வர்களுக்கு 3 வாரங்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், பிப்.16 வரை குறைகளை / புகார்களை அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அவற்றையும் ஆராய்ந்து உயர்மட்டக் குழு, மார்ச் 3-ம் தேதிக்குள் தங்களின் அறிக்கையைச் சமர்ப்பிக்கும். அதன்பிறகே 2வது கட்டத் தேர்வுகள் நடத்தப்படும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.