மறைந்த உ.பி. முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவின் உடல் 300 பாதுகாப்பு வாகனங்கள் புடைசூழ மலர்தூவி மரியாதையுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.


உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சியின் (எஸ்பி) மூத்த தலைவருமான முலாயம் சிங் யாதவின் உடல்நிலை கடந்த வாரம் மோசமடைந்ததையடுத்து, குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ஐசியு) மாற்றப்பட்டார்.


82 வயதான முலாயம் சிங், பல நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால்,  உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், பலனின்றி உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் இன்று காலமானார்.


உத்தரபிரதேசத்தில் உள்ள எடவா மாவட்டத்தில் உள்ள சைஃபை கிராமத்தில் சுகர்சிங்-முர்த்திதேவிக்கு 1939ம் ஆண்டு நவம்பர் 22-ந் தேதி பிறந்தவர். முலாயம் சிங் யாதவ் எடவா மாவட்டத்தில் உள்ள கர்ம் ஷேத்ரா கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். சிகோகபாத்தில் பி.டி. பட்டம் பெற்றார். ஆக்ரா பல்கலைகழகத்திற்குட்பட்ட பி.ஆர். கல்லூரியில் அரசியல் அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றார்.


முலாயம்சிங் யாதவிற்கு பள்ளி காலங்களில் இருந்தே அரசியலில் ஆர்வம் இருந்து வந்துள்ளது. மாபெரும் தலைவர்களான ராம்மனோகர் லோஹியா மற்றும் ராஜ் நரேன் ஆகியோரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு அவர்கள் வழியில் அரசியலில் நுழைந்தார். பின்னர், 1967ம் ஆண்டு முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று உத்தரபிரதேச சட்டப்பேரவைக்கு சென்றார். பின்னர் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வராக மூன்று முறை பதவி வகித்தார். மத்திய பாதுகாப்பு அமைச்சராகவும் பதவி வகித்திருக்கிறார்.


தலைவர்கள் இரங்கல்:
முலாயம் சிங் யாதவ் மறைவையடுத்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “ முலாயம்சிங் யாதவ் தனித்துவமான ஆளுமை. அவர் மக்களின் பிரச்சினைகளை உணரும் எளிமையான தலைவர். அவர் மக்களுக்காக விடாமுயற்சியுடன் சேவை செய்தார். அவர் தனது வாழ்க்கை முழுவதும் ஜனநாயகத்திற்காக அர்ப்பணித்தார். முலாயம்சிங் யாதவ் உத்தரபிரதேசத்திலும், தேசிய அரசியலிலும் தன்னை தனித்துவம் மிக்கவராக காட்டினார். எமர்ஜென்சி காலத்தில் ஜனநாயகத்திற்காக துருப்புச்சீட்டாக செயல்பட்டார். பாதுகாப்பு அமைச்சராக அவர் பொறுப்பு வகித்தபோது வலிமையான இந்தியாவிற்காக பாடுபட்டார். பாராளுமன்றத்தில் அவரது நுண்ணறிவு தேசிய நலனை மேம்படுத்துவதில் ஆர்வமாக இருந்தது.” என்று பதிவிட்டிருந்தார்.






300 வாகனங்கள் அணிவகிக்க ஊர்வலம்:
இந்நிலையில் மறைந்த உ.பி. முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவின் உடல் 300 பாதுகாப்பு வாகனங்கள் புடைசூழ மலர்தூவி மரியாதையுடன் இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. முலாயம் சிங் யாதவ் மறைவை ஒட்டி 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து 300 பாதுகாப்பு வாகனங்கள் புடைசூழ ஊர்வலமாக யமுனா எக்ஸ்பிரஸ்வே சாலையில் அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டது. வழிநெடுக சமாஜ்வாதி கட்சித் தொண்டர்கள் நின்று கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர்.