மத்திய பிரதேசத்தில் இருந்து சில பகுதிகளை பிரித்து உருவாக்கப்பட்ட மாநிலம்தான் சத்தீஸ்கர். மாநில மக்கள் தொகையில் 30 சதவிகிதத்தினர், பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்கள். மாநிலம் உருவாக்கப்பட்டு முதல் மூன்று ஆண்டுகள் மட்டுமே காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அங்கு நடைபெற்றது. 2003ஆம் ஆண்டுக்கு பிறகு, 2018ஆம் ஆண்டு வரை, பாஜகவின் கோட்டையாக இருந்தது. தொடர்ந்து மூன்று தேர்தல்களில் வெற்று பெற்று பாஜக ஆட்சி அமைத்தது. இப்படிப்பட்ட சூழலில், கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், 15 ஆண்டுகளுக்கு பிறகு, சத்தீஸ்கரில் ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ்.
பா.ஜ.க. வெற்றி:
அந்த வகையில் சத்தீஸ்கரில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நவம்பர் 7 ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவும் 17 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்றது. நக்சல்களால் பாதிக்கப்பட்டுள்ள 20 தொகுதிகளில் 7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில், யாரும் எதிர்பாராத விதமாக 78 சதவிகித வாக்குகள் பதிவாகின. இரண்டாம் கட்டத்தில் 67.34 சதவீதம் வாக்குகள் பதிவானது.
5 மாநில தேர்தலுக்கான முடிவுகள் டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடுமையான போட்டி நிலவி வந்தது. சத்தீஸ்கரில் காங்கிரஸ் கை ஓங்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் பாஜக வெற்றி பெற்றது. காங்கிரஸ் 34 இடங்கள் மட்டுமே கைப்பற்ற முடிந்தது. பாஜக 54 இடங்கள் பிடித்து அபார வெற்றி பெற்றது.
சத்தீஸ்கர் முதலமைச்சர்கள் யார்?
கிட்டத்தட்ட ஒரு வார காலம் ஆகியும் இன்னும் பாஜக தரப்பில் இருந்து முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்யவில்லை. புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுக்க மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் முண்டா மற்றும் சர்பானந்தா சோனாவால் மற்றும் கட்சியில் பொதுச் செயலாளர் துஷ்யந்த் குமார் கவுதம் ஆகியோரை வெள்ளிக்கிழமை நியமித்தது. இந்த நிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் கூட்டம் சத்தீஸ்கரில் இன்று நடைபெற உள்ளது. இன்று நடைபெறும் கூட்டத்தில் சத்தீஸ்கரின் அடுத்த முதலமைச்சர் யார் என அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தொடரும் இழுபறி:
சத்தீஸ்கரில் மட்டுமல்லாமல் ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்திலும் ஆட்சியை கைப்பற்றிய பாஜக முதலமைச்சர் யார் என அறிவிப்பத்தில் சிக்கல் நீடித்து வருகிறது. இந்த 3 மாநிலங்களிலும் மேலிடப் பார்வையாளர்களை பாஜக நியமித்துள்ளது.
ராஜஸ்தானில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜக 115 இடங்களில் வென்று காங்கிரஸிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது. ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பதவிக்கான போட்டியில் வசுந்தர ராஜே சிந்தியா, சாமியார் பாபா பாலக்நாத் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல் மத்திய பிரதேசத்தில் பாஜக 163 இடங்களில் வென்று ஆட்சியைத் தக்க வைத்தது. மத்திய பிரதேசத்தில் முதல்வராக இருந்த சிவராஜ் சிங் சவுகான் இந்த முறையும் தான் தான் முதல்வர் என திட்டவட்டமாக நம்புகிறார், ஆனால் பாஜக புதுமுகத்தை முதல்வராக அறிமுகம் செய்ய விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், கே. லக்ஷமண், ஆஷா லக்ரா ஆகியோர் அடங்கிய பார்வையாளர்களை குழுவை மத்திய பிரதேச முதல்வரை தேர்வு செய்வதற்காக பாஜக நியமித்துள்ளது.