தீவிரவாத தாக்குதலுக்கு திட்டம்
காஷ்மீரில் பகல்ஹாம் தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து இந்த தீவிரவாத சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதை உறுதி செய்த இந்திய அரசு, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம் மீது தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து நாடு முழுவதும் தீவிரவாத சம்பவங்களை தடுக்கும் வகையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தீவரி கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
3 பேரை தட்டி தூக்கிய ஏடிஎஸ்
இந்த நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிட்டதாகக் கூறப்படும் 3 சந்தேக நபர்களை பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) கைது செய்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரி கூறுகையில், பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஒரு வருடமாக இந்த நபர்களை தொடர்ந்து கண்காணித்து வந்ததாகவும், அந்த வகையில் சந்தேக நபர்கள் தாக்குதல் சம்பவத்திற்காக ஆயுதங்களை வழங்க முயன்றபோது கைது செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.
இந்த நபர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்தனர் என தெரியவந்துள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்டவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களின் விவரங்கள் பயங்கரவாத தடுப்பு குழு வெளியிடவில்லை.